

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகுப் பொடி வீசப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி என்ற அந்த பெண் நேற்று காலை வந்தபோது அங்கிருந்த ஒருவர் மிளகுப் பொடியை ஸ்பிரே மூலமாக முகத்தில் தெளித்தார். இதனால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து பிந்துவை சிகிச்சைக்காக கொச்சி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனிடையே தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக பிந்து தெரிவித்தார்.