

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. காற்றில் உள்ள பூஞ்சை துகள்களால் ஏற்படும் இந்த நோய், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஏழு பேருக்கு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடிய இந்த நோயால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.