"ஏழைகளை வீடற்றவர்களாக மாற்றுகிறது பாஜக அரசு" - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முழுவதும் ஏழைகளின் வீடுகளை பாஜக அரசு அழித்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி நகர்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அங்கீகரிக்கப்படாத காலனிகளை இடிக்கும் பணியில் டெல்லி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. டெல்லி ஜங்புரா பகுதியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி கேம்ப் பகுதி கடந்த வாரம் டெல்லி அரசால் இடிக்கப்பட்ட நிலையில், தற்போது கால்காஜி பகுதியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் புல்டோசர் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்காஜி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கைக்கு டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தனத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாஜக அரசு ஏழைகளின் வீடுகளை அழிப்பதோடு, அவர்களை வீடற்றவர்களாக மாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார். பாஜக தங்கள் அனைவரையும் கைது செய்தாலும், டெல்லியின் சாமானிய மக்களின் உரிமைக்காக ஆம் ஆத்மி தொடர்ந்து குரல் எழுப்பும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.