ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் மீது அட்டாக் - தாக்கியவர் ராணுவ வீரரா..? ராணுவம் விளக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களை பயணி தாக்கிய விவகாரத்தில், தாக்குதல் நடத்தியவர் ராணுவ வீரர் என தெரிய வந்துள்ளது... கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொண்டு அந்த நபர் ஊழியர்களை கண்மூடித் தனமாக தாக்கியிருந்தார். இதில் 2 ஊழியர்களின் தாடை, முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர், ராணுவத்தில் பணியாற்றும் லெப்டினண்ட் கர்னல் ரித்தேஷ் குமார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்துமாறு ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் இந்திய ராணுவம் மிக உயர்ந்த ஒழுக்கம், நடத்தை, தரத்தை நிலைநிறுத்த உறுதி பூண்டுள்ளது என்று ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு, வழக்கை விசாரிப்பதில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
