AI Updates | `AI' யூஸ் பண்றீங்களா? வரப்போகும் அதிரடி மாற்றம்
ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
இன்று சமூக வலைதளங்களை ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆக்கிரமித்து வருகிறது. டீப்ஃபேக் வீடியோக்களுக்கும் ஆபத்தாக உருவாகி வருகிறது. இந்த சூழலில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பம் விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
அதாவது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்களில் இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற குறியீடு இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது.
அதாவது வீடியோ, ஆடியோ காட்சிகளில் 10 சதவீதம் குறியீடு இடம்பெற வேண்டும். வீடியோவை பதிவிடுபவர்கள் குறியீட்டை செய்ய தவறினால், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்து குறியீட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பங்களால் சமுதாயத்துக்கு தீங்கு ஏற்படுகிறது என கூறியிருக்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏஐயால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் உண்மையா? என்பதை பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வரைவு விதிகள் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
வருகிற நவம்பர் 8 ஆம் தேதி வரையில் பரிந்துரை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என இ-மெயில் முகவரியையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
