Smoking| இந்தியாவில் முழுவதுமாக தடை?
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைபிடிக்க முழுத் தடை விதிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பிறர் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, பொது இடங்களில் முழுமையான புகைப்பிடிப்புத் தடையை அமல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் முன்னாள் உறுப்பினர் வி.கே. பால் மற்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். புகையில்லா இந்தியா அமைப்பு நடத்திய இணையவழி கருத்தரங்கில் பேசிய வி.கே. பால், இந்தியாவில் இரண்டாம் நிலை புகையால் பாதிக்கப்படுவோரின் விகிதம் குறைந்தாலும், அதன் ஒட்டுமொத்த பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். 2023ஆம் ஆண்டில் மட்டும், பிறர் புகைத்த புகையை சுவாசித்ததால் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை இருந்தாலும், சில இடங்களில் பிரத்யேக புகைப்பிடிக்கும் பகுதிகளுக்கு அனுமதி உள்ளது இந்த அனுமதியை முற்றிலும் நீக்கி, 100 சதவீதம் புகையில்லா பொது இடங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
