எப்படி இருக்கிறது சண்டக்கோழி 2..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது..
எப்படி இருக்கிறது சண்டக்கோழி 2..?
Published on

சண்டக்கோழி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினருடைய பிரச்சனை காரணமாக வரலட்சுமி சரத்குமாரின் கணவன் ஒருவரை வெட்டிக் கொல்கிறார். அதைப் பார்த்த மற்றொரு தரப்பினர், வரலட்சுமி கணவனை அவள் முன்பே கொன்றுவிடுகிறார்கள். இதற்காக வரலட்சுமி தன் கணவனை கொன்றவர்கள் வம்சமே இருக்கக் கூடாது என்று தனது அடியாட்களை வைத்து அவர்களை கொலை செய்கிறார். திருவிழா கலவர பூமியாக மாறி 8 பேர் இறந்து விடுகிறார்கள். பிறகு அந்த ஊரில் ஏழு வருடங்களாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. ராஜ்கிரன் ஊர் திருவிழாவை நடத்த முயற்சிக்கிறார். சில வருடங்கள் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து தந்தைக்கு உதவியாக திருவிழா வேலைகளை செய்கிறார் விஷால்.

அதன்பின் ராஜ்கிரண் எவ்வாறு அந்த ஊர் திருவிழாவை நடத்தினார்? வரலட்சுமி சரத்குமார் எப்படியெல்லாம் திருவிழாவிற்கு இடையூறு செய்தார்? நடிகர் விஷால் தனது தந்தையுடன் சேர்ந்து அதை எப்படி முறியடித்தார்? என்பதையே சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்து திருவிழா விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

படத்தின் கதாநாயகனாக வரும் பாலு (விஷால்) மற்றும் அவரது தந்தை அய்யா (ராஜ்கிரண்) ஆகியோர் ஊரின் முக்கயிஸ்தா்களாக திகழும் நிலையில் அவா்களுக்கு எதிராக பேச்சி (வரலட்சுமி சரத்குமார்) செயல்படுகிறார். விஷாலுக்கு நிகரான கம்பீரத்துடன் வரலட்சுமி தோன்றியுள்ளார். மிரட்டலான வில்லியாக வரும் வரலட்சுமிக்கு கிளைமேக்ஸில் வலுவான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்கிரண் தனது கம்பீரத் தோற்றத்தில் சண்டை போடும் காட்சிகளும், விஷால் சண்டை போடும் காட்சிகளும் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது.

பெரும்பாலான காட்சிகள் திருவிழா செட்டப்பிலேயே நகா்கின்றன. முதல்முறையாக விஷாலுடன் இணைந்து நடித்துள்ள கீா்த்தி சுரேஷ் நகைச்சுவை, காதல் கலந்த கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் வலுசோ்க்கும் வகையில் அமைந்துள்ளது. முணுமுணுக்க வைக்கும் "கம்பத்து பொண்ணு" பாடலை அவரை பாடியுள்ளார். சண்டக்கோழி முதல் பாகத்திற்கும் தற்போதைய 2ம் பாகத்திற்கும் பெரிய அளவில் தொடா்பு இருந்ததாக தெரியவில்லை. முதல் பாகத்தை பார்த்தால் தான் சண்டக்கோழி 2 புரியும் என்று ரசிகர்கள் குழப்பமடைய தேவையில்லை. விஷால் லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 கிராமத்து விருந்தாக அமைந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com