ரவி மோகன் வழக்கு..! ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
நடிகர் ரவி மோகனுக்கு எதிரான வழக்குகளில், அனைத்து நிவாரணங்களுக்கும், நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணனை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திரும்ப தர, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோல, கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல் இழப்பு ஏற்படுத்தியதால், 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, அந்த நிறுவனத்திற்கு எதிராக நடிகர் ரவி மோகனும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, நடிகர் ரவி மோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில், நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு, வரும் 13ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து நிவாரணங்களுக்கும் நடுவரை அணுகுமாறும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல், நீதிபதி சத்தியநாராயணன் விசாரிப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
