தர்பார் பட விவகாரம் - பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் மனு

பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்து வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு விநியோகஸ்தர்கள் என கூறிக் கொண்டு 25 பேர் சென்றுள்ளனர். அவர்கள் முருகதாசுக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார். நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் முருகதாஸ் பாதுகாப்பு கோரி அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com