ஆலங்குளம் - மாயமான மூதாட்டி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

ஆலங்குளம் - மாயமான மூதாட்டி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

ஆலங்குளம் அருகே மூதாட்டி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் வயது 80, இவர் காணாமல் போனதாக அவரது மகன் முத்தையா என்பவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலகலங்கல் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் கருகிய நிலையில் பிரேதம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி வழியாக சென்ற சிலர் பார்த்து ஊத்துமலை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கருகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் காணவில்லை என ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சண்முகத்தாய் என்பது தெரிய வந்தது.

காணாமல் போன மூதாட்டி 20 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று கொலை செய்து எரித்தனரா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com