முதியவரிடம் நலம் விசாரித்த அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆற்காடு அடுத்த சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் வெங்கடாபதி, வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று மனு வழங்கினார். ஆனால் அதற்கான ரசீது வழங்கப்படாததால், அதிகாரிகள் வனத்துறை ஆக்கிரமிப்புக்கு துணையாக இருப்பதாகவும் அவர் அங்கிருந்த மேடையிலே கூச்சலிட்டார்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உடன் வெங்கடாபதிக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வெங்கடாபதிக்கு லேசான காயம் ஏற்பட்டதால், உடனே அவர் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த முதியவர் வெங்கடாபதியை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் வெங்கடாபதியின் கோரிக்கைக்கு தாம் முழு ஆதரவு தருவதாகவும், தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
