திருமண வரன் பெற வழிபாடு... "காலில் பச்சை நரம்பு மச்சத்துடன் காட்சி" மனசஞ்சலங்களை நீக்கும் கோதண்டராமன்

x

நாடி வருவோரின் மன சஞ்சலம் நீக்கி அமைதி அளிக்கும் திருவாரூர் கோதண்டராமர் கோயிலின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்..

உன் திருமுக மலர் வணங்கிட வரும் கோடி யோகமே.. உன் திருவடி நிழல் சரணமே என் மோட்சம் கூடுமே..

ராம ராம ஜெய ராம...என்று ராமரின் அழகை காண பலரும் தேடி வரும் தலம் இது..

1862 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் வாழ்ந்த ராம பக்தர் ஒருவர் தன் கனவில் வந்ததை போல ஸ்ரீ ராமர் மடத்தை கட்ட வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்..

அதற்காக ஒரு இடத்தில் குளத்தை தோண்டும் போது அங்கு செங்கற்களால் ஆன கட்டிடம் ஒன்று தென்ப்பட்டுள்ளது.

அதை கண்டு ஆச்சர்யம் அடைந்த ராம பக்தர் அதே இடத்தை சற்று மேலும் பாதுகாப்புடன் தோண்ட அந்த இடத்தில் ராமர், சீதா பிராட்டியார், லட்சுமணன், அனுமன் ஆகியோர்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது..

பக்தி பரவசம் கொண்ட ராம பக்தர் அவ்விடத்தில் குடிசை போன்ற கோயில் அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.

பிறகு அவ்விடம் புணரமைக்கப்பட்டு கோதண்டராமர் கோயில் என்றானதாக கூறுகிறது வரலாறு..

இங்கு மூலவராக கோதண்டராமர் வலது காலில் பச்சை நரம்பு தெரிய காட்சி அளிக்கிறார்..

இடது காலில் தேமல் மச்சம் மற்றும் வடுக்களும், தாயார் கட்டிய ரக்ஷாபந்தனமும் தெளிவாக காட்சி அளிக்கிறது..திருமஞ்சன அலங்காரம் செய்தாகும் இந்த அடையாளங்களை பக்தர்களால் காண முடியும்..

இங்குள்ள ராமர் சிலை சுமார் 4 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது..

மேலும் ராமருக்கு அருகில் சீதா பிராட்டியாரும், மற்றொரு புறம் லட்சுமனரும் காட்சி அளிக்கின்றனர்.

ராமருக்கு முன்பாக அனுமனானவர் பரதனுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என்பதை வலது கையால் வாயை மூடியும் இடது கையை மடக்கியும் பணிவுடன் அமர்ந்து கேட்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார்..

திருமண வரன் அமைய, மன சஞ்சலம் நீங்க இங்குள்ள ஆஞ்சநேயருக்கு புது வேஷ்டி வாங்கி ஒரு படி தயிர் வைத்து பூஜித்தால் நமது வேண்டுதல்களை அவர் ராமரிடம் முறையிட்டு தீர்ப்பார் என்பது ஐதீகம்..

கோயிலானது காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்..

பட்டுக்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டரும், திருத்துறைபூண்டியில் இருந்து 16 கிலோ மீட்டரும் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்...

மனசஞ்சலங்கள் நீக்கி அமைதியை அளிக்கும் கோதண்டராமரை வணங்குவோம் நலம் பெறுவோம்..


Next Story

மேலும் செய்திகள்