மகளிர் கிரிக்கெட் - வந்தார்கள்... வென்றார்கள்... 6வது முறை சாம்பியன்... அதிரடி காட்டிய ஆஸி. அணி

x
  • இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பாய்ச்சலுடன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா...
  • லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட சறுக்காமல்... அரையிறுதியில் இந்தியாவை வென்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியாவிற்கு, மீண்டும் கேப்டவுனில் டாஸ் சாதகமாக அமைந்தது.
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க ஜோடியில் அலைசா ஹேலி 18 ரன்களில் பெவிலியன் திரும்பினாலும், பெத் மூனி நிலைத்து நின்று விளையாடினார்.
  • மூனியுடன் கைகோர்த்த கார்ட்னர், அரையிறுதி ஆட்டத்தைப்போல் அதிரடி காட்ட, பத்து ஓவர்களில் 73 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா..
  • மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோருக்கு தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சற்று வேகத்தடை போட்டனர்.
  • என்றாலும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகளாகப் பறக்கவிட்டு, மூனி 74 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் என்ற டீசன்ட்டான ஸ்கோரை ஆஸ்திரேலியா எட்டியது.
  • தென்னாப்பிரிக்காவிற்கு 157 ரன்கள் இலக்கு. சற்று கடினமான ஒன்றுதான். இறுதிப்போட்டி என்பதால் அழுத்தத்தை ஆரம்பம் முதலே உணரத் தொடங்கினர் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள்...
  • லாரா வோல்வார்ட் மட்டும் ஒரு முனையில் நிற்க, பிரிட்ஸ், காப், கேப்டன் சூன் லஸ் ஆகியோர் பந்துகளை விழுங்கிவிட்டு வெளியேறினர்.
  • சோல் டிரையான் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் பவுலிங்கும் பீல்டிங்கும் அபாரமாக இருந்தது.
  • விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லாரா வோல்வார்ட் தன்னந்தனியாக தென் ஆப்பிரிக்காவை கரை சேர்க்கும் முனைப்பில் போராடினார்.
  • ஓவர்கள் செல்ல செல்ல ரன் ரேட் எகிறியது. அழுத்தமும் அதிகரித்தது. விளைவு, 61 ரன்களில் லாரா எல்.பி.டபிள்யூ ஆக, தென் ஆப்பிரிக்காவின் முழு நம்பிக்கையும் தகர்ந்தது.
  • லாராவின் விக்கெட்டுக்குப் பிறகு வீசப்பட்ட ஓவர்கள் சம்பிரதாய கணக்குதான். லாராவின் விக்கெட்டின்போதே ஆஸ்திரேலியாவின் வெற்றியும் உறுதியானது.
  • 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்கா எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தாங்கள் அசைக்க முடியாத அணி என்பதை மீண்டும் மகளிர் கிரிக்கெட் உலகிற்கு உரக்கக்கூறி உள்ளது.
  • ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மகளிர் அணி வெல்லும் 6வது டி20 உலகக்கோப்பை இது... தொடர்ச்சியாக 3வது டி20 உலகக்கோப்பை... 2வது முறையாக ஹாட்ரிக்...
  • இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால்,,,,,,, வழக்கம்போல் வந்தார்கள்... வழக்கம்போல் வென்றார்கள்...

Next Story

மேலும் செய்திகள்