எதிர்கட்சிகளால் பாஜகவிற்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்இருதுருவங்கள் இணையுமா?...
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்த பேச்சுக்கு மத்தியிலே கேரளா, மேற்கு வங்கத்தில் என்ன நடக்கும்...? என்ற கேள்வி தேசிய அரசியலில் தொடர்கிறது.
கேரளாவில் ஆளும் இடதுசாரிகளும், காங்கிரசும் எதிர் எதிர் துருவம்.. மேற்கு வங்கம் சொல்லவே வேண்டாம்... ஆளும் மம்தா பானர்ஜியும், இடதுசாரிகளும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். இது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் மேலும் அதிகரித்தது என்றே சொல்லலாம்
நிலமை இப்படியிருக்க, இந்த கட்சிகள் எல்லாம் எப்படி கூட்டணியில் தாக்குபிடிக்க போகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் மேற்கு வங்கம் மிக முக்கிய மாநிலமாக இருக்கிறது.
இந்தியாவில் 3-வது அதிகமான எம்.பி.க்களை கொண்ட மாநிலத்தில் 42 மக்களவை தொகுதி உள்ளது.
கடந்த 2019 தேர்தலில் பாஜகவே அதிர்ச்சியடையும் வகையில் அக்கட்சிக்கு 18 எம்.பி.க்கள் மேற்கு வங்கத்திலிருந்து கிடைத்திருந்தார்கள்.
இப்போது மாநிலத்தில் 2-ஆவது பெரிய கட்சியாக இருக்கிறது பாஜக. அங்கு பாஜகவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் மம்தா முன்பாக இருக்கிறது. அதே வேளையில் அவர் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பாரா...? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இப்போதும் தொடர்கிறது.
முக்கியமாக பெங்களூரு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
அலையன்ஸ், அதாவது கூட்டணி என்ற வார்த்தைய பயன்படுத்துவது சரியாக இருக்காது என குறிப்பிட்ட சித்தராம் யெச்சூரி, இங்கே ஒன்றாக இருந்தாலும் சில மாநிலங்களில் எதிர் எதிர் கட்சிகளாக இருக்கும் போது கூட்டணி என சொல்வது கேலிக்கூத்தாக இருக்கும் என கூறியதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் எதிர்க்கட்சிகள் கூட்டணி 'இண்டியா' கூட்டணி என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்...
மம்தா கட்சியின் சர்வாதிகாரம் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலிலே காணப்பட்டது என கூறியிருக்கும் பிருந்தா காரத்,
மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் ஒருபக்கம் ஜனநாயகத்தை தாக்கிக்கொண்டே, மறுபக்கம் ஜனநாயகத்தை காக்க முடியாது என விமர்சனம் செய்துள்ளார்.
மம்தாவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசிக்கப்படும் என பிருந்தா காரத் தெரிவித்திருக்கிறார். ஆனால் பெங்களூரு கூட்டத்திற்கு முன்பாகவே திரிணாமுல் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில்லை என சித்தராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இப்படி மேற்கு வங்கத்தில் வாக்குகள் பிரிந்தால்... ஏற்கனவே அங்கு ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்ட பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்றே பார்க்கப்படுகிறது. இந்த பிளவை எதிர்க்கட்சிகள் எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
