"அவருடன் வாழாமல் விட மாட்டேன்".. பிரபல ஜவுளிக்கடை அதிபரின் வீட்டு முன் நின்று நியாயம் கேட்கும் மனைவி

x

கேரள மாநிலம் திருச்சூரில் துணிக்கடை நடத்தி வருபவர் மதன் மோகன். இவரது மகள் சுபராகா. எம்பிஏ ப​ட்டதாரியான சுபராகாவிற்கும், சேலம் ராஜாராம் நகர் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ரவிச்சந்திரன் என்பவரின் மகன் கார்த்திக் பாலாஜி என்பவருக்கும் இடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தேறியது.புகுந்த வீட்டில் கனவுகளுடன் குடியேறிய சுபராகாவுக்கு, திருமணமாகி சில மாதங்களிலேயே, கணவன் வீட்டாரின் சுயரூபம் வெளிப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்து போனார்.கணவர் மற்றும் அவரது வீட்டாருக்கு, பணத்தின் மேல் மட்டுமே குறியாக இருந்ததால், சுபராகாவின் வாழ்க்கை கசக்கத் தொடங்கியது.

கணவர் கார்த்திக் பாலாஜியும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டு, வரதட்சணை என்ற பெயரில், சுபராகாவின் குடும்பத்தினரிடம் இருந்து பணத்தை கறக்கத் தொடங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிறைய கடன் இருப்பதால், பெற்றோரிடம் இருந்து 5 கோடி ரூபாய் பணத்தை வாங்கி வரச்சொல்லி கணவனும், அவரது வீட்டாரும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது..கணவன் வீட்டாரின் கொடுமை தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் சுபராகா, தனது பெற்றோர் வசிக்கும் திருச்சூருக்கே சென்றுள்ளார்.ஆனால், மனைவி பிரிந்து போனதை சற்றும் பொருட்படுத்தாத கணவர் கார்த்திக் பாலாஜி, சுபராகாவுக்கு மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவாகரத்து நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

கணவனின் செயலால் அதிர்ந்துபோன சுபராகா, திடீரென கேரள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, தனது கணவர் வீட்டில் இருக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுபராகாவின் மனுவை ஏற்று, விவாகரத்து வழக்கு முடியும் வரை, அவரது கணவர் வீட்டில் இருந்து கொள்ள அனுமதி அளித்தது.

கேரள உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு நகலுடன், திருச்சூரில் இருந்து சேலத்திற்கு தனது பெற்றோருடன் சென்ற சுபராகாவுக்கு, கணவரின் வீட்டில் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது... சுபராகாவும், அவரது பெற்றோரும், வீட்டிற்குள் நுழைய முயற்சித்தபோது, அவர்களை கணவர் கார்த்திக் பாலாஜி தடுத்து நிறுத்தியுள்ளார்.நீதிமன்ற உத்தரவை காண்பித்தும் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காததால், ஏமாற்றத்துடன் மீண்டும் திருச்சூருக்கே திரும்பினார் சுபராகா... நீதிமன்ற உத்தரவே கையில் இருக்கும்போது என்ன பயம் என எண்ணிய சுபராகா, அடுத்தநாளே துணிச்சலுடன் மீண்டும் திருச்சூரிலிருந்து சேலத்திற்கு படையெடுத்தார். கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் குதித்த சுபராகா, கணவர் கார்த்திக் பாலாஜியுடன் சேர்த்து வைக்க வேண்டும், அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்நிலைய போலீசார், சுபாராகாவை சமாதானப்படுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த சுபராகா, தொடர்ந்து கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

"மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பிரச்சினை கொடுத்தனர்"

"திருமணத்திற்கு முன் அவர்களுக்கு பணப்பிரச்சினை இல்லை"

"எனது திருமணத்திற்கு பிறகுதான் பணப்பிரச்சினை"

"எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது"

வாழமாட்டேன் என விடாப்பிடியாக இருக்கும் கணவன் வீட்டு முன்பு, வாழ்ந்தே தீருவேன் என மனைவி உறுதியுடன் இருப்பதால், கணவனின் மனம் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்