கோவில் கருவறையில் தோண்டப்பட்ட குழி... புதையல் வேட்டையில் கிடைத்தது என்ன..?

x

சிதிலமடைந்த சிவன் ஆலயத்தின் கருவறையில் புதையல் வேட்டை நடந்திருப்பதாக நமது குற்ற சரித்திரம் நிகழ்ச்சிக்கு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன் முழு பின்னணியை தெரிந்துகொள்ள செய்தியாளர் சுரேஷ்குமாருடன் நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்தோம்.... நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது நெல்லியாளம் பகுதி. இயற்கை அழகும் ஈடு இணையில்லா ரம்மியமும் கொண்டு விளங்கும் ஒரு சொர்க்க பூமி. அழகிருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் குடிகொண்டிருக்கும் என்பதற்கு ஏற்றவாறு, பசுமையால் அரணமைக்கப்பட்ட சாலை நம்மை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றது.

வீசும் தூரலில் குடை பிடித்துக்கொண்டு நம்மை வரவேற்ற கோவில் நிர்வாகிகள், சிதிலமடைந்த கோவிலின் மிச்சமீதியை காட்டினார்கள். அங்கும் இங்குமாக கடவுள் சிலைகள், புதர் மண்டி நின்ற கோவில் கருவறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சுவர்கள் என அந்த இடமே அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்தது.அடுத்த நொடி அவர்கள் காட்டிய காட்சி நாம் இத்தனை தூரம் கடந்து வந்ததற்கான காரணம். ஆம்.... கருவறையின் பின்புறம் மண் சரிந்து கிடக்க, உள்ளே 10 அடி ஆழத்தில் இருந்தது ஒரு பெரிய பள்ளம். சம்பவம் நடந்த அன்று சாமி தரிசனத்திற்கு வந்த சிலர் இந்த காட்சியை பார்த்திருக்கிறார்கள்..நிச்சயம் இந்த பள்ளம் புதையலுக்காக தோண்டப்பட்டது எனவும் பகீர் கிளப்பினார்கள்.

இதனுள் புதையல் எப்படி வந்தது... இந்த கோவிலின் வரலாறு என்ன...? என்ற கேள்விகளுக்கு விடை காண நாம் 500 வருடங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும் கிட்டதட்ட 450 ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாட்டு தலமாக விளங்கி இருக்கிறது இந்த சிவன் கோவில். அதன் பின் கால மாற்றத்தால் முறையான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போயிருக்கிறது. காலங்கள் மாற தலைமுறைகளும் கோவிலை கண்டுகொள்ளவில்லை. இதனால் வழிபாட்டிலிருந்தே வழிதவறிய இந்த ஆலயம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி போயிருக்கிறது. கோவிலில் இருந்த சாமி சிலைகளையும், வரலாற்று சிற்பங்களையும் சிறுக சிறுக திருடிச்சென்றுள்ளனர். கொள்ளையர்கள் விட்டு வைத்த மிச்சமும், இயற்கை சீற்றத்தினால் சேதமடைந்ததன் சொச்சமுமே இன்று நாம் காணும் இந்த காட்சி. இந்நிலையில் தான் கோவிலை மீண்டும் புணரமைக்க நினைத்த கிராம மக்கள், அரசாங்கத்திடம் உதவி கேட்டிருக்கிறார்கள்.அதிகாரிகளின் ஆதரவோடு, ஆதினங்கள் தலையிட்டு கோவிலை மீண்டும் கட்டி தருவதாக கூறவே அதற்கான திருப்பணிகளில் நிர்வாகத்தினர் இறங்கி உள்ளனர்.10 நாட்களுக்கு முன், கேரள பூசாரிகளை வைத்து கோவிலை பாலாயணம் செய்து புணரமைப்பு பூஜை ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.

அந்த பூஜையில் தான் கோவிலுக்கும் மறைந்திருக்கும் ஒரு மர்ம ரகசியத்தை அந்த பூசாரிகள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கருவறைக்கு கீழ் புதையல் இருக்கும் தகவல் காட்டுத்தீயாய் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவி இருக்கிறது. அந்த புதையலை எடுக்கவே இரவோடு இரவாக மர்ம கும்பல் கருவறையை தோண்டி இருக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் சந்தேகித்துள்ளனர் உடனே இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளம் தோண்டிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.கொள்ளயர்கள் பிடிபட்ட பிறகே உள்ளே இருந்தது புதையலா...?, பழங்கால தங்க நகைகளா ? அல்லது ஐம்பொன் சிலைகளா ? என்பது தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்