காஷ்மீரின் எல்லைக்கோடு எது..? "ஐ.நா சபை தலையிட அனுமதி இல்லை.."என்ன சொல்கிறது சிம்லா ஒப்பந்தம்..?

x

வங்கப் போர் முடிவடைந்த பின், இந்தியா பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

1947ல், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலையடைந்த போது, பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டது. ஆனால் ஹரி சிங் என்ற மகாராஜாவின் ஆட்சியில் இருந்த ஜம்மு காஷ்மீர், 1947 அக்டோபர் வரை தனி நாடாக தொடர்ந்தது.

அதை இரு நாடுகளும் சொந்த கொண்டாடின. ஜம்முவில் இந்துகள் பெருமான்மையினராகவும், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் இருந்தனர்.

1947 அக்டோபரில் காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்த பின், மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். காஷ்மீரை மீட்க இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது.

ஆனால் அதற்குள் வட மேற்கு மற்றும் மேற்கு காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் கைபற்றி விட்டது. இதர பகுதிகளை மீட்ட இந்தியா, பின்னர் அதை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஆனால் அன்று முதல் இன்று வரை, மொத்த காஷ்மீரையும் கைபற்ற பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக 1965 மற்றும் 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர்கள் நடைபெற்றன.

1971 டிசம்பரில், கிழக்கு பாகிஸ்தான் பகுதி தனி நாடாக பிரிய, இந்தியா உதவி செய்தது. வங்க தேச விடுதலை போரில், பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபராக ஸுல்பிகர் அலி பூட்டோ பதவியேற்றார்.

1972 ஜூலையில், இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன், பாகிஸ்தான் அதிபர் பூட்டோ ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.

காஷ்மீர் பிரச்சனையை இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளவும், ஐ.நா சபை உள்ளிட்ட எந்த ஒரு மூன்றாம் தரப்பும் இதில் தலையிட அனுமதிக் கூடாது என்றும் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

1971 டிசம்பர் 17ல் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த எல்லைக் கோட்டை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக மாற்ற இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. 1999 கார்கில் போர் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களை தொடர்கிறது.

சிம்லா ஒப்பந்தத்தில், இந்திரா காந்தியும், பூட்டோவும் கையெழுத்திட்ட தினம், 1972, ஜூலை 2.


Next Story

மேலும் செய்திகள்