சாலை வசதி இல்லாமல் தொடரும் பலிகள்.. 90 ஆண்டுகளாக திண்டாடும் மலை கிராமம்.. அனுமதி கிடைத்தும் நிர்கதியாய் நிற்கும் மக்கள்

x

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆன நிலையில் மலைகிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாமல், பிரசவத்திற்காக டோலி கட்டி தூக்கிச்செல்லும் கொடுமை அரங்கேறி வருகிறது..... சாலை வசதி இல்லாமல், பழங்குடி மக்கள் பல்லாண்டு காலமாக அனுபவிக்கும் கொடுமை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சமீபத்தில் வேலூர் மாவட்டம் அத்திமரத்துகொல்லை பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு பாம்பு கடித்த நிலையில்,சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாமல் உயிரிழந்தது.

அதே போல திருவண்ணாமலை ஜவ்வாது மலை எழந்தம்பட்டு கிராமத்தில் உடல்நலம் சரியில்லாத பெண் ஒருவர், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் தெள்ளை மலை கிராமத்தில் 90 ஆண்டு காலம் சாலை வசதி இல்லாத கொடுமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது....

இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், சாலை வசதியோ, தெருவிளக்கு வசதிகளோ இல்லாமல், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக கூட பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டுமென்றால் தீ பந்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கர்ப்பிணிகளும், முதியவர்களும் குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், வழியிலேயே உயிரிழப்பது இங்கு தொடர்கதையாகி வருகிறது.

பள்ளி மாணவர்கள் தினம் தினம் வந்து செல்ல முடியாது என்பதால் பெற்றோர்களை பிரிந்து உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

பாபு, ஊர் தலைவர்

இப்பகுதியில் 10 காணாறுகள் ஓடும் நிலையில், தண்ணீர் கரைபுரண்டு ஓடும் மழைக் காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு எங்குமே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாலை வசதியும், பாலமும் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கும்போதெல்லாம், இந்த ஆறுகளை காரணம் காட்டி தமிழக அரசு கைவிரித்தததாக கூறப் படுகின்றது.

ஒரு வழியாக வனத்துறையினரிடம் பேசி, 9 பாலங்கள் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், தமிழக அரசு சார்பில் இதுவரை நடவடிக்கை இல்லை...


வெங்கட்ராமன், தெள்ளை கிராமம்

மலைப்பகுதிகளில் சாலை அமைக்க, பாலம் கட்ட வனத்துறையிடம் அனுமதி வாங்குவதுதான் சிரமமான காரியம். அவர்கள் அனுமதி கொடுத்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தெள்ளை கிராம பகுதியில்தான்.

உயிரிழப்புகள் ,விபத்துகள் என தொடர்ச்சியாக இழப்புகளை சந்திக்கும் இந்த மக்கள், இனியாவது ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்