அதிரடியாக வங்கிக்குள் நுழைந்து மேனேஜர் மீது பெட்ரோல் ஊற்றிய VAO

x

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில், கடன் தொல்லையால் இதுவரை சுமார் 45 பேர் தற்கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மியால், கேரளாவில் தற்போது அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள அத்தாணி பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெடரல் வங்கியில், கையில் பையுடன் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில், திடீரென பையிலிருந்து பெட்ரோல் பாட்டிலை எடுத்து, வங்கி உதவி மேலாளர் மீது அந்த நபர் ஊற்றியுள்ளார். யாரும் அருகே வரவேண்டாம் எனவும், வங்கியை கொள்ளையடிக்க வந்துள்ளதாகவும் கூறவே, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் வங்கி ஊழியர்கள் கூச்சலிடவே, அதனைக் கேட்டு வெளியில் இருந்த பொதுமக்கள் வங்கிக்குள் வந்துள்ளனர். பொதுமக்கள் வங்கியில் புகுந்ததை பார்த்த அந்த நபர், அங்கிருந்து தப்பியோடினார். எனினும், பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்து, வங்கிக்கு வெளியே உள்ள ஒரு தூணில் கட்டி வைத்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், கைதான நபர் கிராம நிர்வாக உதவியாளர் லிஜோ கண்ணோஸ் என தெரியவந்தது.இந்த சம்பவத்தில் லிஜோ மீது கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகளை பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து, லிஜோ கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது.ஆன்லைன் ரம்மியில் அடிமையான லிஜோ, அதில் நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சுமார் 60 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த முடியாததால், லிஜோ வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்