குடலுடன் தைக்கப்பட்ட கர்ப்ப பை...சளிக்கு நர்ஸ் போட்ட விபரீத ஊசி - "அய்யோ இந்த மருத்துவமனையா?" - அலறும் மக்கள்

x

சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் ,கடலூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒரு உயிரை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள்... சிறிது கவனம் தவறினாலும்... 'காக்கும் மருத்துவமே எமனாகி விடுகிறது'. இந்தியாவில் ஆண்டுக் 52 லட்சம் மருத்துவத் தவறுகள் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன.

அந்த வகையில், அடுத்தடுத்து தவறான சிகிச்சை முறையால் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, கடலூர் அரசு மருத்துவமனை.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், கடலூர் அரசு மருத்துவ மனையில், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்மணிக்கு கருப்பையை குடலுடன் சேர்த்து மருத்துவர்கள் தைத்ததால் தீராத வலியால் அந்த பெண் அவதியுற்று வந்தார்.

இது குறித்து புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறி, கடந்த சில நாட்களுக்கு முன், பெண்ணின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவ மனை முன் போராட்டத்தில் ஈடுப்ட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் தனது அஜாக்கிரதையால் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, கடலூர் அரசு மருத்துவமனை.

கடலுார் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான கருணாகரன், சளி தொந்தரவால் அவதிப்பட்ட தனது 13வயது மகள் சாதனாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஊசி மருந்து எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து ஊசி போடும் இடத்திற்கு தனது மகளை அழைத்துக் சென்றிருக்கிறார் கருணாகரன்.

அங்கு பணியில் இருந்த செவிலியர் மருத்துவ சீட்டை பார்க்காமலேயே சிறுமிக்கு இரண்டு ஊசி போட்டு இருக்கிறார். சாதாரண சளி தொந்தரவுக்கு இரண்டு ஊசியா என அதிர்ந்து போன கருணாகரன், சீட்டை பார்க்காமலேயே என்ன ஊசி போடுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார் பதிலுக்கு அந்த செவிலியர், நாய்க்கடி என்றால் இரண்டு ஊசி தான் போட வேண்டும் என பதில் கூறியதும் அதிர்ச்சி அடைந்தார், கருணாகரன்

சளி தொந்தரவுக்காக தனது மகளை அழைத்து வந்ததாக அவர் கூறியதும் மழுப்பிய செவிலியர்கள், தெரியாமல் தவறு நடந்து விட்டது , மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மயக்கமடைந்த சிறுமி சாதனா, சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பணியில் அலட்சியமாக இருந்து சிகிச்சை அளித்த செவிலியர்கள், பணியில் இருந்த டாக்டர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலுார் புதுநகர் காவல்நிலையத்தில் கருணாகரன் புகார் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற அலட்சியங்கள் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்பதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் கடலூர் மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்