சிறுவன் உயிரை பறித்த அனுமதியற்ற எருது விடும் விழா... காளை முட்டியதில் மூதாட்டி ஒருவரும் பலி..!

சிறுவன் உயிரை பறித்த அனுமதியற்ற எருது விடும் விழா... காளை முட்டியதில் மூதாட்டி ஒருவரும் பலி..!
x



பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த ஈரம் காயும் முன்பே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த 2 பலி சம்பவங்கள் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாதேப்பள்ளி கிராமத்தில் அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஆனால் எந்த பாதுகாப்புமின்றி பார்வையாளர்கள் இவ்விழாவை பார்த்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் இரண்டு துயர சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இவ்விழாவை காண நண்பர்களுடன் நாடுவனபள்ளி கிராமத்திலிருந்து பவன்குமார் என்ற 11 வயது சிறுவன் வந்திருக்கிறான். அப்போது திடீரென ஒரு காளை மட்டும் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்துள்ளது. உடனே அனைவரும் அலறியடித்து ஓட, சிறுவன் பவன்குமார் காளையிடம் சிக்கினான். வந்த வேகத்தில் கொம்பால் அவனை குத்தி தூக்கி போட்டுள்ளது. பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.





மகனுக்கு நேர்ந்ததை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை பவன்குமார் உயிரிழந்தான். இந்த துயர செய்தியை கேட்ட அடுத்த சில மணி நேரங்களிலே கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் காளை முட்டி உயிரிழந்துள்ளார்.

எருது விடும் விழா நடந்த கிராமத்தில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்ற 72 வயது மூதாட்டியை காளை வேகமாக முட்டி தள்ளியுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். இந்த இரண்டு உயிரிழப்பு சம்பவங்களுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்