போலீஸ் ஜீப் ஸ்டியரிங்கை திருப்பிய திருச்சி ரவுடிகள்.. முட்டியில் சுட்டு மற்ற ரவுடிகளுக்கும் வார்னிங் தந்த போலீஸ்

x
  • திருச்சி, புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம் என்கிற சாமி.
  • துரைசாமி மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 69 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • அதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகள் உள்ளன. அதேபோல சோமசுந்தரம் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 22 வழக்குகள் உள்ளன.
  • இந்த நிலையில், உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார், அதிகாலை 5.30 மணி அளவில் சோமசுந்தரம் மற்றும் துரைசாமி ஆகிய இருவரை, நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • இருவரையும் போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, சினிமாவில் வருவதுபோல், கண்ணிமைக்கும் நேரத்தில் சோமசுந்தரம், போலீஸ் வாகனத்தின் ஸ்டீரியங் வீலை திடீரென திருப்பியுள்ளார்.
  • அதில், சாலையில் இருந்து விலகிய வாகனம், அருகில் இருந்த வயல்வெளியில் பாய்ந்தது.
  • இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரவுடிகள் இருவரும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
  • எனினும், சுதாரித்துக் கொண்ட போலீசார், அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது, ரவுடிகள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
  • இதில், ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் அசோக், சிற்றரசு ஆகிய 3 பேருக்கு, கைகளில் காயம் ஏற்பட்டது.
  • ஆபத்தை உணர்ந்து கொண்ட போலீசார், தாங்கள் வைத்திருந்த கை துப்பாக்கியால் முழங்காலுக்கு கீழே சுட்டதில், சோமசுந்தரம் மற்றும் துரைசாமி இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
  • பின்னர் இருவரையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார், நடந்த சம்பவத்தை, காவல் ஆய்வாளர் மோகன், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
  • அதன் அடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உள்ளிட்ட அதிகாரிகள், காயமடைந்த அனைவரையும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
  • பின்னர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய அவர், சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், விசாரணைக்காகவோ, கைது செய்தோ அழைத்துச் செல்லும் போது, போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்