சுங்கச்சாவடி காவலாளி கொலை வழக்கு - விசாரணையில் வெளிவந்த பகீர் வாக்குமூலம்

x

அரியலூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான 2 பேர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி.கைகாட்டி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் திருச்சி சிதம்பரம் சாலையில் சுங்கச்சாவடி காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் 2 நாள்களுக்கு முன் செந்துறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மற்றும் மணிகண்டனை ஆகிய 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் மற்றும் கைதான இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, காமராஜ் செல்போனை சுரேஷ் குமார் திருடியதாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த காமராஜ் பல முறை செல்போனை கேட்டும் சுரேஷ்குமார் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், மணிகண்டனுடன் சேர்ந்து சுரேஷ்குமாரை மது அருந்த அழைத்துள்ளனர்.

அப்போது, செல்போன் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுரேஷ்குமாரை இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து, சுரேஷ்குமாரின் உடலை இரு சக்கரவாகனத்தில் எடுத்து வந்து செந்துறை அருகில் உள்ள டாஸ்மாக் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.

இந்த வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரிடத்திலும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்