தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா.ஆதித்தனார் மறைந்த தினம் இன்று...

x

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் 1905-ல் பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக் கல்வியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.

கல்லூரியில் படிக்கும்போது தொழில் வெளியீட்டகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படிஉள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையும் வெளிப்பட்டது.

பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

சுதேசமித்ரன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார்.

1942-ல் தமிழகம் திரும்பிய பின் மதுரை முரசு என்ற வாரம் இருமுறை வரும் இதழையும், பின்னர் தமிழன் என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையால், அவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும் கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.

1942 நவம்பரில், மதுரையில் தினத்தந்தி நாளிதழை தொடங்கினார். 1947-ல் சேலத்தில் தினத்தாள், 1948-ல் திருச்சியில் தினத்தூது ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.

எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு, பாமர மக்களையும் பத்திரிக்கை படிக்க வைத்தார்.

தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் இயக்கங்களைத் தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 1942 முதல் 1953 வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ல் சபாநாயகராகவும், 1969இல், திமுக அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.1981-ல், தனது 76 வயதில் காலமானர்.

தமிழ் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார், மறைந்த தினம், 1981 மே 24.


Next Story

மேலும் செய்திகள்