சீனாவில் சார்ஸ் நோய் முதல் முறையாக கண்டறியப்பட்ட தினம் இன்று.

x

கொரோனா நோயின் முன்னோடியான சார்ஸ் நோய், 2002ல் முதல் முறையாக சீனாவில் பரவத் தொடங்கியது. நுரையீரலை கடுமையாக பாதிக்கும் இந்த வைரஸ் நோய் தொற்றியவர் களில் சுமார் 11 சதவீதத்தினர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் போலவே, சார்ஸ் வைரஸும் விலங்கு களின் மூலம் மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது. இந்த வைரசுக்கு சார்ஸ் சி.ஓ.வி ஒன்று என்று பெயரிடப் பட்டுள்ளது.

கொரோனா நோயைப் போலவே காய்ச்சல், தசைநார்களில் வலி, இருமல் போன்ற அறிகுறிகளை சார்ஸ் வைரஸ் ஏற்படுத்தியது. சார்ஸ் நோயாளிகளின் மூச்சு காற்று மூலம் இந்த வைரஸ் காற்றில் பரவுவது கண்டறியப்பட்டது.

சீனாவின் குவான்டாங் மாகாணத்தின் ஃபோஸன் நகரில் முதல் முறையாக் கண்டறியப்பட்ட சார்ஸ் வைரஸ், பின்னர் ஹாங்காங் மற்றும் இதர மாகாணங்களுக்கு பரவியது. ஆனால் இதைப் பற்றிய தகவல்களை சீன அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது.

2003 பிப்ரவரியில் உலக சுகாதார நிறுவனத்திற்கு இதைப் பற்றி தகவல் அளிக்கப்பட்டது. மார்ச்சில் இதைப் பற்றி உலக அளவில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

தைவான், கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சார்ஸ் வைரஸ் பரவியது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.

சுமார் 8 மாதங்கள் வரை தீவிரமாக நீடித்த இந்த நோய் பரவல், பின்னர் மட்டுப்பட்டது. 2004 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. உலகெங்கும் 30 நாடுகளில் சுமார் 8000 பேருக்கு சார்ஸ் நோய் தொற்றியது. இவர்களில் 774 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் நான்கு பேருக்கு சார்ஸ் நோய் தொற்றியது.

சீனாவில் முதல் முறையாக சார்ஸ் நோய் தொற்றுதல் கண்டறியப்பட்ட தினம், 2002 நவம்பர் 16.


Next Story

மேலும் செய்திகள்