காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே தூக்கிலப்பட்ட தினம் இன்று

x

1947ல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனி நாடானது.

பிரிவினைக்கு காந்தி துணை போனார் என்றும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, இந்துக்களுக்கு துரோகம் செய்தார் என்றும் இந்து மகாசாபை உள்ளிட்ட சில தீவிர இந்துத்துவ அமைப்புகள் காந்தியை விமர்சனம் செய்தன.

பிரிவினையின் போது பல லட்சம் அப்பாவி மக்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டனர். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காந்தி வலியிருத்தினார். இதனால் இந்து மகாசபா உறுப்பினர்கள் அவர் மீது வெறுப்பை அதிகரித்துக் கொண்ட னர்.

இந்து மகாசாபையின் உறுப்பினராக தீவிரமாக பணியாற்றிய நாதுராம் விநாய்க் கோட்சே, இளம் வயதில் ஆர்.எஸ்.எஸின் உறுப்பினராகவும் பணியாற்றினார். பூனாவைச் சேர்ந்த கோட்சே, இந்து மகாசாபை நிறுவனர்களில் ஒருவரான சாவர்கரின் தொண்டராக உருவெடுத்தார்.

மகாத்மா காந்தியை கொல்ல, நாரயணன் ஆப்தே மற்றும் ஆறு இதர சகாக்களுடன் கோட்சே திட்டம் தீட்டினார். 1948 ஜனவரி 30ல் டெல்லியில் பிர்லா மாளிகையின் தோட்டத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது, மகாத்மா காந்தியை கோட்சே சுட்டு கொன்றார்.

உடனடியாக கைது செய்யப்பட்ட கோட்சேவிடம் காவல் துறையினர் தீவிர விசராணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் சாவர்கர், நாராயணன் ஆப்தே, கோபால் கோட்சே மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்சே மற்றும் நாராயணன் ஆப்தேவிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்தது. கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே மற்றும் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாவர்கர் மீது குற்றம் நிருபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

மகாத்மா காந்தியின் புதல்வர்கள் மணிலால் காந்தி மற்றும் ராமதாஸ் காந்தி, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால் அனைத்து கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 1949ல் அம்பாலா சிறையில் கோட்சே மற்றும் நாரயணன் ஆப்தே தூக்கிலிடப்பட்டனர்.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற விநாயக் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம் 1949 நவம்பர் 15.


Next Story

மேலும் செய்திகள்