இந்திய அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தினம் இன்று.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்த சமயத்தில், புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்றை உருவாக்க அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது. இந்த சபைக்கான 389 உறுப்பினர்களை, மாகாண சபைகள் தேர்வு செய்தன.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின்
தலைவராக அம்பேத்கர் சிறப்பாக பணியாற்றி, பெரும் பாரட்டுதல்களை பெற்றார்.
1946 டிசம்பர் 9இல் அரசியலமைப்பு சபையின் முதல் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. சுதந்திர இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பு எப்படி
இருக்க வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்கள் இடையே பல மாதங்களுக்கு விவாதம் நடந்தது.
பிரிட்டன், அயர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் ஆனது. இதில் 395 ஷரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள் உள்ளன.
வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அரசியலமைப்பு சட்டம் வகை செய்தது. தனி மனித உரிமைகள், சமூக நீதி, கருத்து சுதந்திரம், சுதந்திரமான நீதித் துறை, ஊடக சுதந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவுகள் சேர்கக்ப்பட்டன. சுதந்திரவாத, மதசார்பற்ற ஜனனாயக அரசை உருவாக்க வகை செய்யப்பட்டது.
இது கையால் எழுதப்பட்ட, உலகிலேயே மிக நீண்ட அரசியலமைப்பு சட்டமாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1.17 லட்சம் வார்த்தைகள் உள்ளன.
1949 நவம்பர் 26இல் இதில் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இதை அங்கீகரித்தனர். அந்த தினம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தினம், 1949 நவம்பர் 26.
