சரித்திர நாயகன் "கறுப்பின விடுதலை போராளி" ..நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்ற தினம் இன்று..!

x

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த தென் ஆப்பிரிக்கா, 1931இல் விடுதலை பெற்றது. ஆனால் பெரும்பான்மையினரான கருப்பினத்தவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு, வெள்ளையினத்தவரின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்தது. கருப்பினத்தவர்கள் ஊருக்கு வெளியே தனிக் குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டனர். வெள்ளை இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகள், மற்றும் வெளியூர் செல்ல உள்நாட்டு பாஸ்போர்ட் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கருப்பினத்தவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க, நெல்சன் மண்டேலா தலைமையில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. நாட்டின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இரு தரப்பிலும், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. 1962இல், 44 வயதான நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு, ராப்பென் தீவு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.நிறவெறி கொள்கைகளை கைவிட்டு விட்டு, கருப்பின மக்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா மீது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. பொருளாதார தடைகளை விதித்தன.

இதைத் தொடர்ந்து, 1990 பிப்ரவரியில் மண்டேலாவை 27 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்க அரசு விடுதலை செய்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது. கருப்பின மக்களுக்கு வாக்குரிமை மற்றும் இதர உரிமைகளை அளிக்க வகை செய்யப்பட்டது.1994 ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் முதல் முறையாக கருப்பின மக்கள் வாக்களித்து, வரலாறு படைத்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக, கருப்பினத்தவர் அரசு பதவியேற்றது. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபராகி, வரலாறு படைத்தார்.தென் ஆப்பிரிக்க அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்ற தினம்,1994, மே 10.


Next Story

மேலும் செய்திகள்