பிரபல ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிறந்த தினம் இன்று...

x

1956ல் தஞ்சை மாவட்டம், பாபநாசதத்தில் ஆதி சங்கர் பிறந்த நாள் அன்று பிறந்ததால் பெற்றோர் அவருக்கு ரவி சங்கர் என்று பெயரிட்டனர்.

நான்கு வயதிலேயே பகவத் கீதையை மனப்பாடமாக ஒப்பிக்கும் அசாத்திய திறன் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே ஆழ் நிலை தியானப் பயிற்சி பெற்றார். அவரது முதல் ஆசிரியரான சுதாகர் சதுர்வேதி மகாத்மா காந்தியுடன் நீண்ட நாள் தொடர்புடையவர்.

பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற பின், மகிரிஷி மகேஷ் யோகியின் சீடரானார். அவருடன் உலகம் முழுவதும் பயணம் செய்து, தியான மையங்கள் மற்றும் ஆயுர்வோத சிகிச்சை மையங்களை உருவாக்க உதவினார்.

1982ல் கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில், பத்ரா நதிக்கரையில் 10 நாட்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு, சுதர்ஷன் க்ரியா என்ற தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். பிறகு அவர் அதை மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

1983ல் வாழும் கலை நிறுவனத்தைத் தொடங்கினார். சுவிட்சர்லாந்தில் முதல் பயிற்சி வகுப்பை நடத்தினார். 1986ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தனது பணிகளை விரிவுபடுத்தினார்.

தற்போது உலகெங்கும் 152 நாடுகளில் வாழும் கலை நிறுவனத்தின் கிளைகள் மற்றும் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது.

தலாய் லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்பீடுகள் கழகத்தை தொடங்கினார். மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

சிறைக் கைதிகளுக்கு யோகா, தியான பயிற்சிகள் அளித்து சேவை செய்தார். பாகிஸ்தான், ஈராக், கொலம்பியா போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அமைதி பேச்சு வார்த்தைகளை ஊக்கு வித்தார்.

2019ல் அயோத்தியா பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றார். இவரின் சேவைகளுக்காக மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது அளித்து கெளரவித்துள்ளது.

ஆன்மீக குருவும், சமாதான தூதுவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிறந்த தினம், 1956, மே 13.


Next Story

மேலும் செய்திகள்