மிரட்டும் அரபிக் கடலில் உருவான புயல்.. எந்தெந்த மாநிலங்களுக்கு ஆபத்து..? - 12 மணி நேரத்தில்..ஷாக் தந்த வானிலை மையம்

x

அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபர்ஜாய்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், எச்சரிக்கைக்குரிய மாநிலங்கள் எவை என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான முதல் புயல் 'பிபர்ஜாய்'. புயல் காரணமாக தென்மேற்கு மாநிலங்களுக்கு பல்வேறு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்.

செவ்வாய் அன்று அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதை அடுத்து... புதனன்று அது தீவிரப் புயலாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று தற்போது அதிதீவிர புயலாக மாறி வருகிறது.

அடுத்த 12 மணி நேரத்திற்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல் மேலும் அதி தீவிரமடையும் என எச்சரித்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பிபர்ஜாய் புயலானது கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது.

கோவாவிலிருந்து 860 கிலோ மீட்டர் மேற்கு-தென்மேற்கில், மும்பையிலிருந்து 910 கிலோ மீட்டர் தென்மேற்கே உள்ளது.

"இது மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயல் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தென்மேற்கு மாநிலங்களில் பலத்த காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தற்போது பார்க்கலாம்.

கேரளாவில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தை குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், இந்த புயல் காரணமாக மகாராஷ் டிராவில் பருவமழை தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஜூன் 14ல் இருந்து பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கோவாவில் கரையை கடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. புயல் காரணமாக கோவா மற்றும் கர்நாடகா மாநில கடலோரப் பகுதிகளில் ஜூன் 12-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை குஜராத் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் ஜூன் 9 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்