Threadsஆல் ட்விட்டருக்கு Threat..! எலன் சொலி முடிக்க களமிறங்கிய மார்க்..!

x

உலக அளவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியனவற்றின் வரிசையில் இன்று புதிதாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது "த்ரெட்ஸ்" செயலி. இந்த செயலி அறிமுகப்படுத்தபப்ட்ட இரண்டே மணி நேரத்தில் 20 லட்சம் பயனர்களும், 7 மணி நேரத்தில் ஒரு கோடி பயனர்களும் டவுன்லோடு செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதில் விஷேசம் என்னவென்றால், த்ரெட்ஸ் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது தான்.உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்திவரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்களில் நான்கில் ஒரு பங்கு பயனர்கள் இந்த புதிய செயலியை பயன்படுத்தினாலே, ட்விட்டர் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை எளிதாக முந்தி விடலாம் என்கின்றனர் துறைசார் வல்லுனர்கள்.

இதற்கிடையே, 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மார்க் சூக்கர்பெர்க், அதில் 2 ஸ்பைடர்மேன்கள் மோதலுக்கு தயாராவது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார். டிவிட்டருக்கு போட்டியாக களமிறக்கியுள்ள செயலியை பற்றி ட்விட்டரிலேயே அவர் பதிவிட்டிருப்பது "சபாஷ் சரியான போட்டி" என இணையவாசிகள் அதகளப்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் வெளியிடப்படும் ஒரு பதிவில் அதிகபட்சமாக 280 வார்த்தைகள் வரை டைப் செய்து பதிவிடலாம். அதுவே ட்விட்டரில் பணம் செலுத்தி ப்ளூடிக் வசதியை பெற்றுக்கொண்ட பயனர்கள் 10,000 வார்த்தைகள் வரை ஒரே பதிவில் டைப் செய்யலாம்.த்ரெட்ஸ் செயலியில் பதிவிடப்படும் ஒரு பதிவில் அதிகபட்சமாக 500 வார்த்தைகள் வரை டைப் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அத்துடன் த்ரெட்ஸ் செயலியில் வெளியிடும் பதிவுகளை உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

ட்விட்டருக்கு மாற்றாக "ப்ளூ-ஸ்கை, மாஸ்டோடன், ட்ரூத்-சோசியல்'' உள்ளிட்ட செயலிகள் பயன்பாட்டில் உள்ள போதிலும், த்ரெட்ஸ் அவற்றையெல்லம் ஓரங்கட்டி பின்னுக்கு தள்ளும் என்று துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர்.பார்ப்பதற்கு தமிழில் உள்ள "கு" எழுத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் த்ரெட்ஸ் செயலியின் "லோகோ'' பார்ப்பதற்கு காது மற்றும் கேமராவை போல் உள்ளது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 2006 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ள ட்விட்டர், வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள த்ரெட்ஸ் - ட்விட்டரை பின்னுக்கு தள்ளுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்