“அந்த குளத்தில் யாரும் இறங்கியது கிடையாது“ - இறங்கிய ஒருநாளில் 5 உயிர்கள் பலி... சென்னையை உலுக்கிய தீர்த்தவாரி சம்பவம்
சென்னை மடிப்பாக்கம் அருகே கோயில் தீர்த்தவாரியில் 5 பேர் பலியான துயர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
தீர்த்தவாரிக்காக சுவாமியை சுமந்து கொண்டு குளத்தில் இறங்கியவர்கள் நிச்சயம் இப்படி ஒரு துயர சம்பவம் நடக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்...
குளத்திற்குள் இறங்கியவர்கள் உயிருக்கு போராடும் வகையில் தண்ணீரில் தத்தளித்த அந்த வீடியோ காட்சிகள் நிச்சயம் பார்த்தவர்கள் மனதை உலுக்கும்...
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பட்டு பகுதியில் பல வருடங்களாக தூர் வாரப்படாமல் இருந்த கோயில் குளம் அது... குப்பைகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிந்த அந்த குளத்தை தூர் வாரி தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 2021ல் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது...
இந்த குளத்தின் அருகே இருந்த தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது வருடந்தோறும் கோயிலின் உள்ளே நடைபெற்று வந்த நிலையில் குளம் தூர்வாரப்பட்டதில் இருந்து குளத்தின் உள்ளே நடந்து வந்திருக்கிறது..
குளம் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதோடு சரி.. குளத்தின் உள்ளே யாரும் இறங்கியது கிடையாதாம்...
கடந்த வருடத்தில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு மட்டும் அர்ச்சகர்களும், கோயில் நிர்வாகிகளும், வேத பள்ளியில் பயிற்சி பெற்று வரும் தன்னார்வலர்கள் மட்டும் குளத்தில் இறங்கியுள்ளனர்...
அன்று மட்டுமே குளத்தில் ஆட்களை பார்க்க முடியும் என்று ஊர்மக்கள் கூறும் நிலையில், இந்த குளத்தின் ஒரு பக்கத்தில் 20 அடி கிணறும், மற்றொரு பக்கத்தில் 40 அடி கிணறும் இருப்பதாக கூறப்படுகிறது...
இந்நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆற்றில் அர்ச்சகர்களுடன் இறங்கிய வேத பள்ளியில் பயிற்சி பெற்று வந்த தன்னார்வலர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி இருக்கிறார்.. தண்ணீரில் அவர் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பலரையும் பதற வைத்தது..
அவரை காப்பாற்ற சென்ற மற்ற நான்கு பேரும் சேறும், சகதி நிறைந்த குளத்தில் சிக்கி தங்கள் உயிரை விட்டனர்...
இதில் உயிரிழந்த புழுதிவாக்கத்தை சேர்ந்த ராகவனும், நங்கநல்லூரை சேர்ந்த வனேஷூம் சி.ஏ. மாணவர்கள். நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த சூர்யா, தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும்.... மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் தனியார் கார் கம்பெனியிலும் பணியாற்றி வந்துள்ளார்.... மேலும், புழுதிவாக்கத்தை சேர்ந்த ராகவ் என்பவரும் சி.ஏ படித்து விட்டு அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்..
இவர்கள் 5 பேருமே இந்த நிகழ்வில் தன்னார்வலர்களாக ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலையில் அதுவே அவர்களுக்கு இறுதி நிகழ்வாக மாறிப்போனது தான் சோகம்..
பொதுவாக தீர்த்தவாரி நிகழ்வின் போது இதுபோன்ற கோயில் குளங்களின் ஆழமான பகுதியிலும், சேறுகள் உள்ள இடத்திலும் சிக்கிக் கொண்டால் உதவும் வகையில் குளத்தின் உள்ளே குச்சிகள் வைக்கப்படுவது வழக்கம்...
ஆனால் இந்த குளத்தில் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்கிறார்கள்... ஒருவேளை உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் நேர்ந்திருக்காது என்கிறார்கள் சம்பவத்தை பார்த்தவர்கள்...
5 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மகனை ஆசையோடு அனுப்பினோமே.. இப்படியா சடலமாக பார்ப்போம்? என அவர்களின் கதறலுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை... அவர்களின் கண்ணீருக்கு பின்னால் வலிகள் தான் நிரம்பி இருக்கிறது...
