மனைவி வைத்து அசாத்திய திருட்டு... பர்தா அணிந்து 10 சவரனை சுருட்டிய பெண் - "சிசிடிவியை பார்த்தால் செம்ம ஷாக்!"
கோவை மாவட்டம் சூலூரில், நகை பட்டறையில் போலி நகை கொடுத்து, 10 சவரன் நகையை பெண் எடுத்துச் சென்றது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சூலூர் கலங்கள் பாதையில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறைக்கு, பர்தா அணிந்து காரில் இறங்கிய பெண் ஒருவர், தன்னிடம் 12 சவரன் நகை இருப்பதாகவும், அதற்கு பதிலாக புது நகை தருமாறும் கேட்டுள்ளார். அதை வாங்கிக் கொண்ட கண்ணன், அதற்கு பதிலாக 10 சவரன் நகையை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், அந்த பெண் கொடுத்த நகையை சோதித்து பார்ப்பதற்காக, பட்டறைக்குள் கண்ணன் சென்ற வேளையில், 10 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, அந்த பெண் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகை பட்டறையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர், தனது மனைவியை பயன்படுத்தி திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, அன்னதானப்பட்டியில் பதுங்கி இருந்த தன்ராஜை கைது செய்த போலீசார், 10 சவரன் நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
