திருமண மண்டபங்களாக மாறும் தியேட்டர்கள்... ஓடிடியில் தஞ்சம் அடையும் சினிமா பிரியர்கள் - குறையுமா சினிமா டிக்கெட் கட்டணம்?

x

திரையரங்குகளில் மக்கள் வருகை அதிகரிக்க ஏதுவாக, டிக்கெட் கட்டணத்தை குறைக்கும் நோக்குடனும் பல்வேறு கோரிக்கைகள் முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

ஓடிடி அறிமுகமானது முதல் திரையரங்கிற்கான மவுசு படிப்படியாக குறைந்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் திரையிடும் போது மட்டும் திருவிழா போல் காட்சியளிக்கும் திரையரங்குகள் மற்ற நேரங்களில் களையிழந்து காணப்படுகின்றன.

இதற்கு ஓடிடி மட்டும் தான் முழு காரணமா என்றால், இல்லை..டிக்கெட்டின் விலையேற்றமும் ஒரு காரணம்.

ஒரு படத்தை பார்க்க 150 முதல் 200 ரூபாய் டிக்கெட்டிற்கு மட்டுமே செலவு என்றால், பார்க்கிங், பாப்கார்ன் என டிக்கெட் கட்டணத்தை கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த செலவையெல்லாம் குறைக்க, மாத சந்தாவாக 200 ரூபாய் கொடுத்து, ஓடிடியில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர் சினிமா பிரியர்கள்.

இருந்தாலும் தியேட்டரில் பார்ப்பது போல இல்லை என்ற உணர்வுக்காக மட்டுமே சில படங்களை திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்து வருகின்றனர் மக்கள்.

ஏராளாமான தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாறிவிட்ட நிலையில் இருக்கும் தியேட்டர்களை உயிர்ப்பிக்க தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், விநியோகிஸ்தர்கள் சங்கத்தினர், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதில் முக்கியமாக பார்க்கப்படுவது, கூடுதல் வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தான்.

திரையரங்குகளில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்டு களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியுடன் சேர்த்து கூடுதலாக உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. இதில் கூடுதலாக விதிக்கப்படும் 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் சிங்கிள் ஸ்கிரினோடு இருக்கும் பெரிய திரையரங்கில் நான்கு திரைகள் வரை கொண்ட திரையரங்கங்களாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், மானியமும், வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர் சங்கத்தினர், இத்திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

வரிச்சலுகை அளிக்கும் பட்சத்தில், தியேட்டர்களில் டிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்