உலகமே பார்த்து வியந்த அதிசய மனிதன்.. கோவையின் நாயகன் ஜி.டி.நாயுடு- உருவாகிறது பயோபிக் - யார் ஹீரோ..?

x

வெளிநாட்டுக்கு ஒரு இந்தியர் செல்கிறார். அங்கு ஒரு சலூனில் ஷேவிங் செய்யப்போகிறார். அதற்கான கட்டணத்தை கேட்டு அதிர்ச்சியடைகிறார். இப்போது இரண்டு வாய்ப்புகள்...ஒன்று அதிக விலை கொடுத்து ஷேவிங் செய்வது, அல்லது சொந்தமாக ஷேவிங் செய்து கொள்வது. இதில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்த நினைத்து தமக்கு தாமே ஷேவிங் செய்துபார்த்தபோது காயம் ஏற்படுகிறது.

இரண்டு மூன்று முறை இப்படி ஆன பின், காயம்படாமல் ஷேவிங் செய்ய ஒரு ரேஸரை கண்டுபிடிப்பது என முடிவு செய்கிறார். உலகமே வியக்கும் படி சிறிய மோட்டார் பொருத்தப்பட்ட, மிகவும் மெல்லிசான பிளேடை கொண்ட ஒரு சூப்பரான ரேஸரை கண்டுபிடிக்கிறார்.

இது ஏதோ திரைப்பட காட்சிபோல் இருக்கிறது அல்லவா?...இதுவரை வந்த காட்சி அல்ல, ஆனால் இனி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆம் இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என கொண்டாடப்படும், கோவை மாடவட்டத்தின் கலங்கல் கிராமத்தில் பிறந்த, G.D.நாயுடுவின் வாழ்வில் நடந்த ஏராளமான நிகழ்வுகளில் ஒன்று தான் இது. இவரது வாழ்க்கையை தான் திரைப்படமாக எடுக்கவுள்ளனர். G.D.நாயுடுவாக மாதவன் நடிக்கவுள்ளார்.

எலக்டிரானிக்ஸ், எலக்டிரிக்கல்ஸ், மோட்டார் வாகனங்கள், விவசாயம், சித்த மருத்துவம், கட்டடக்கலை என பல்வேறு துறைகளில், G.D.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பெரும் உதவியாக இருந்துள்ளன. அதுவும் 4ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப்படிப்பை மேற்கொண்டவர் என்பது கூடுதல் வியப்பு.

வெள்ளைக்கார துரை கடனாக கொடுத்த ஒரே ஒரு பேருந்தை தாமே இயக்கி தொழிலை தொடங்கி, இந்தியாவிலேயே தரமான பேருந்து வசதி என்ற பெயரை பெரும் அளவுக்கு ஏராளமான பேருந்துகளை கொண்ட யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனமாக மாற்றிக்காட்டியவர்.பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்க அவரே இயந்திரம் கண்டுபிடித்தார். பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தை காட்டும் கருவியை கண்டுபிடித்தார்.

இப்படி, எப்போதெல்லாம் ஒரு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் அதை தீர்க்கும் வகையில் G.D.நாயுடுவின் மூளையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

கோவை என்ற ஒரு ஊர் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியடைய முக்கிய காரணம் G.D.நாயுடு என்றால் அது மிகையாகாது.

இப்படி எண்ணற்ற கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதை விட, அதற்கு காப்புரிமை கோராமல், மக்களுக்கு பயன்படுவதையே நோக்கமாக கொண்ட விதத்தில் தாமஸ் ஆல்வா எடிசனை விட ஒரு படி உயர்ந்தவர் G.D.நாயுடு.

சினிமாவுக்கு தேவையான ஏராளமான சுவாரஸ்யங்கள் நிறைந்த G.D.நாயுடுவின் வாழ்க்கையை திரையில் காண்பது நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

இப்போதைய இளைஞர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உந்துதலாக இருக்கும் வகையில் இந்த படம் உருவாகவுள்ளது.

நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக, உடல் எடையை கூட்டி குறைத்தது மட்டுமின்றி, பல் வரிசையையே மாற்றி நடித்த மாதவன், G.D.நாயுடுவாக திரையில் தோன்றும் போது எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்