ரகசியத்தை பகிரங்கமாக வெளியிட்ட அமெரிக்கா.. பேரதிர்ச்சியில் உள்ள ரஷ்யா..'புதிய START ' ஒப்பந்தத்தால் சிக்கல்

x

அமெரிக்கா வசம் உள்ள அணு ஆயுதங்களின் பட்டியலை அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

அணு ஆயுதங்கள் பற்றிய விவரங்களை அனைத்து நாடுகளும் மிக ரகசியமாக வைத்திருப்பது வழக்கம். ஆனால் முதல் முறையாக, இந்த வழக்கத்தை மீறி, அமெரிக்க அரசு தன் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் ஏவுகணைகள் பற்றிய விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா வசம் உள்ள 5,244 அணு ஆயுதங்களில், 1,419 அணு குண்டுகள், தாக்குதலுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றை ஏவும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 662 என கூறியுள்ளது.

அணு ஆயுதங்களை குறைக்க, 2011இல், ரஷ்யா, அமெரிக்கா இடையே செய்யப்பட்ட புதிய ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா கடந்த பிப்ரவரியில் விலகியது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விதித்தன. இதனால் அமெரிக்கா ரஷ்யா உறவு மோசமடைந்து, அதன் விளைவாக, ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது.

ஸ்டார்ட் ஒப்பந்ததில் தாக்குதலுக்கு தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் பற்றிய முழு விவரங்களை இரு நாடுகளும் வெளியிட வகை செய்யப்பட்டிருந்தது. முதலில் இதை ஏற்க மறுத்த அமெரிக்கா, பின்னர் ரஷ்யா மீது அழுத்தம் தர, இந்த விவரங்களை திடீரென வெளியிட்டு, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா வசம் உள்ள அணு ஆயுதங்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா வசம் தற்போது சுமார் 6,000 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,600 அணு ஆயுதங்கள், தாக்குதலுக்கு தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவை ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்