இந்தியாவையே புரட்டி போட்ட ரயில் விபத்து.. ஒரே உடலுக்கு பல பேர் உரிமை கோரும் சோகம் - சிக்கலில் ஒடிசா அரசு...களமிறக்கிய 'AI'..

x

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் Artificial Intelligence தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அது பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டி போட்ட ஒடிசா ரயில் விபத்து நடந்து ஐந்து நாட்கள் கடந்துள்ளது. ஒரு புறம் ரயில் விபத்திற்கு காரணம் அறிய சிபிஐ விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில் மற்றொரு புறம், ரயில் விபத்து நடந்த பகுதியில் மறு சீறமைப்பு பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

ஆனால், ரயில் விபத்தில் பலியானவர்களில் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் நீடிக்கிறது. 5 நாட்கள் ஆகிவிட்டதால் இறந்தவர்களின் உடல்கள் அழுகாமல் இருக்க பதப்படுத்தும் பணிகளும் நடைபெறுகிறது.இதற்காக பலியானவர்களின் உடல்களை எம்பாமிங் செய்ய மருத்துவ நிபுணர்கள் ஒடிசா விரைந்துள்ளனர்.

நாக்பூர் மற்றும் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 12க்கும் மேற்பட்ட உடற்கூறியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக எம்பாமிங் செயல்முறை ஒருவர் இறந்தவுடன் விரைவில் செய்யப்படும். ஆனால் விபத்து நடந்த இடத்தில் பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கையாளு வதற்கான உள்கட்டமைப்பு இல்லாததால், உடல்கள் முதலில் புவனேஸ்வருக்கு மாற்றப்படுவதற்கு முன்பு உள்ளூர் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அசுதோஷ் பிஸ்வாஸ், எம்பாமிங் செயல்முறைக்குப் பிறகு உடல்களை பல நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பாரதீப் துறைமுகத்தில் இருந்து ஐந்து சிறப்பு கொள்கலன்கள் பெறபட்டுள்ளதாக தெரிவித்தார்.

உடல்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ஒரே உடலை ஒன்றிற்கும் மேற்பட்டோர் உரிமை கோரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

உரிமை கோரப்படாத உடல்களை அடையாளம் காணும் முயற்சியில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்பர்வையில் Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் காணும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அவர்களின் மொபைல் எண்களுடன் தொடர்புடைய சுயவிவரங்களுடன் பொருந்திபோவதை வைத்து உறுதி செய்யப்படுகிறது. அதன் விளைவாக சுமார் 40 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

KYC என்று சொல்லப்படும் Know your Customer கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆதார் எண்கள் கண்டறியபட்டு அதன் மூலம் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல யுக்திகளை பயன்படுத்தி உரியவர்களிடம் உடல்களை ஒப்படைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது மத்திய அரது என்பது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்