தமிழகத்தேயே உலுக்கிய கோர விபத்து.. 2 பேருந்துகளுக்குள் ரத்த சகதி.. மரண ஓலம்.. அரசு மருத்துவமனையில் குவிந்த தனியார் டாக்டர்கள்

x

பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில்4 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...


பண்ருட்டி அருகே பட்டம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் பேருந்துகளின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது, சிதைந்து போன பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. பேருந்தின் உள்ளும் புறமும் ரத்த சகதியாய் காட்சியளித்தது

அந்த பகுதி முழுவதும் ஒரே அலுகுரலும், அபயக்குரலுமாய் காண்போர் நெஞ்சை பதறவைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சுமார் 80 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரத்தம் சொட்ட சொட்ட...வலியில் துடித்தப்படி பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் பலருக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக வெளியான செய்தி அறிந்த தன்னார்வலர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் குவிய தொடங்கினர். இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

விபத்து செய்தி அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் சி.வி. கணேசன் ஆகியோர் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், படுகாயமடைந்தவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பவர்களை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்