சென்னையில் கொட்டித் தீர்த்த மழை...துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள் - காலை,பிற்பகல் காட்சிகள்

x

சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஓ.எம்.ஆர். சாலையில் காலை மழைநீர் தேங்கிக் கிடந்த நிலையில், தற்போது தேங்கிய மழைநீர் வடிந்துள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஆனால், தற்போது சில மணி நேரங்களிலேயே தேங்கிய மழைநீர் வடிந்து, மழைநீர் இல்லாமல் ஓ.எம்.ஆர். சாலை காணப்படுகிறது.சென்னை பெருங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. இரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால் பெருங்குடி சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனையடுத்து, மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர், தற்போது சாலையில் இருந்த மழைநீர் அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வடசென்னையின் முக்கிய சுரங்கப்பாதையான வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு ,பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேறு பாதையில் பயணித்தனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் மழைநீர் தேங்கி காணப்பட்ட வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில், 3 மணி நேரத்துக்குள் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த சுரங்கப்பாதையில் வாகனப்போக்குவரத்து சீரடைந்தது.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பால சுரங்கப்பாதையில் இடுப்பளவு தேங்கிய மழைநீரை பேரிடர் குழுவினர் அகற்றினர். சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால், கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சுமார் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் ஆலந்தூரில் இருந்து கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழைநீரில் கார் ஒன்றும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, பேரிடர் குழுவினர் மழைநீரை வெளியேற்றினார்கள். இதனால் சுமார் 7 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.


Next Story

மேலும் செய்திகள்