கோர்த்துவிட்ட சில்வண்டு.. எகிறிய கிரைம் ரேட்.. சேவலை ஜெயிலில் போட்ட போலீஸ்

x

காவல்நிலைய லாக்கப்பில், சேவல் ஒன்றை போலீசார் அடைத்து கம்பி எண்ண வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது... இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டம் ஜட்சேர்லா அருகேயுள்ள பூரெட்டிப்பள்ளி கிராமத்தில் நாட்டுக்கோழிகளும், சேவல்களும் தொடர்ந்து குறிவைத்து திருடப்படுவதாக கிராமமக்கள் புலம்பி வந்துள்ளனர்...

இதனால், கோழியையும், சேவலையும் பொக்கிஷம் போல் கருதி வழி மேல் விழி வைத்து இரண்டையும் காத்து வந்த கிராம மக்கள், சம்பவத்தன்று இளஞ்சிறுவன் ஒருவன் கையில் சேவலை வைத்துக்கொண்டு கிராமத்திற்குள் செல்வதை கண்டு சுற்றிவளைத்துள்ளனர்...

சிறுவனை, சேவலையும் சிறைப்பிடித்த கிராம மக்கள், காவல்நிலையம் அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்த நிலையில், தங்களின் பல நாள் மர்ம முடிச்சு இன்று அவிழ போகிறது என காவல்நிலையத்திலேயே காத்திருந்தனர்...

18 வயது நிரம்பாத இளஞ்சிறுவனிடம் விசாரணை நடத்தி, சேவல் எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை பெறமுடியாமல் தவித்த போலீசார், சிறுவனின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்...

இதனையடுத்து, சேவலை வெளியே விட்டாலோ, அல்லது யாருடைய கட்டுப்பாட்டிலாவது வளர்க்க அனுமதித்தாலோ தற்போதைய சூழலில் சேவலை வைத்து கலவரமே வந்தாலும் வரும் என நினைத்த போலீசார், சேவலை குற்றவாளிகளை அடைக்கும் லாக்கப்பிற்குள் பாதுகாப்பிற்காக அடைத்து வைத்துள்ளனர்...

இதனால், அங்கு கூடியிருந்த கிராமமக்கள் சோகத்துடன் காவல்நிலையத்தில் இருந்து கிளம்பினர்...

காவல்நிலையத்துக்கும், சில செல்ல பிராணிகளுக்கும் இடையே இது போன்ற விசித்திரமான சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன...

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இளம் பெண் ஒருவர் தன்னை மயில் கொத்தியதாகவும், அதற்காக மயிலை கைது செய்ய வேண்டும் என கூறிய அவர், அதற்கு சாட்சியாக ஊர்மக்களிடம் கையெழுத்து வாங்கி காவல்நிலையம் வந்தது குறிப்பிடத்தக்கது...

இதற்கு விவசாயிகள் சிலரும் தங்களின் விளைச்சலை, மயில் சேதப்படுத்துவதாக கூறி ஆதரவளித்திருந்தனர்...

இதேபோல் தக்‌ஷின கன்னடாவின் கபடாவில் சாலையில் சுற்றித்திரிந்த குதிரை ஒன்று, வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டது...

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குதிரையை சிறைப்பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில், குதிரையின் உரிமையாளர் காவல்நிலையம் வந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து குதிரையை அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்