எதிரும் புதிருமாக உள்ள எதிர்க்கட்சிகள்.. 2024 தேர்தல்..மோடிக்கு எதிராளி யார்.? சிக்கல்களை தீர்க்குமா பாட்னா மாநாடு..?

x

2024 தேர்தலில் ஒன்றிணைவதை நோக்கி அரசியல் கட்சிகள் நகரும் சூழலில், இது சாத்தியமா...? எதிர்க்கட்சி வரிசையில் எதிரும் புதிருமாக உள்ள அரசியல் கட்சிகளின் நிலையென்ன...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

2013-ல் ஊழல் குற்றச்சாட்டுகளால் உருக்குலைய தொடங்கியது காங்கிரஸ் கூட்டணி... தொடர்ச்சியாக 2014, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது காங்கிரஸ்... காங்கிரசுக்கு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அப்போது எல்லாம் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது அணி என்ற கோஷம்... முதல் அணிக்கு சாதகமாக அமைந்தது.

அமோக வெற்றியுடன் அரியணையை ஏறியது பாஜக. மறுபுறம் தொடர்ந்து மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரசை ஓரம்கட்டின எதிர்க்கட்சிகள்.. இதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு தலைமை ஏற்கவும், மக்கள் நம்பிக்கையை பெறவும் வியூகம் வகுத்த காங்கிரஸ், ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து இமாச்சல், கர்நாடகா தேர்தல் வெற்றியில் துடிப்பாக இருக்கிறது.

2024 தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றும் காங்கிரஸ், கூட்டணி மிக அவசியம் என்பதில் மிக கவனமாக இருக்கிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகளை நோக்கி சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையை மோடி அரசு ஏவிவிடுவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகளும், 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என முழங்க தொடங்கின. இந்த கோரிக்கையை மம்தா சொல்லவும் எதிர்க்கட்சிகள் அணி சூடுபிடிக்க தொடங்கியது.

இந்த திட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணியில் இறங்கினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்... எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த நிதிஷ்குமார், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கூட்டணில் கலந்துக்கொள்ள முதல் ஆளாக பாட்னா வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சித்தராம் யெச்சூரி, டி. ராஜா, மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்க இருக்கிறார்கள். பாட்னாவில் நடக்கும் தேசிய தலைவர்கள் கூட்டம் தேசிய அரசியலில் திருப்பத்தை தருமா... என பார்க்கப்படுகிறது.

இதில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து நடப்பதற்கு அடித்தளம் எப்படி அமைய போகிறது? அவர்களது நிகழ்ச்சிநிரல் எப்படி இருக்க போகிறது என்ற கேள்வியெல்லாம் எழுகிறது.

இதைத் தாண்டி எதிர்க்கட்சிகள் வரிசையில் எதிரும்-புதிருமாக இருக்கும் கட்சிகள் நிலை என்னவாக இருக்க போகிறது என்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை ஆட்சியைவிட்டு அகற்றிய மம்தா நிலைபாடு என்னவாக இருக்கும்...? கேரளாவில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரசும்-இடதுசாரிகள் என்ன செய்யும்...? பஞ்சாப், குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளை வேட்டையாடி, தேசிய அரசியலை குறிவைக்கும் கெஜ்ரிவாலை காங்கிரஸ் எப்படி அணுகப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. உத்தரபிரதேசத்தில் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்கையில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போது இந்த முரண்களை எல்லாம் பாட்னா தீர்க்குமா...? இதில் எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்