காரில் இருந்து இறங்கிய அடுத்த நொடி..ராப் பாடகரை கத்தி முனையில் தூக்கி மின்னல் வேகத்தில் பறந்த கார் - சென்னையில் சினிமா பாணியில் சேசிங்

x

சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த அண்ணனை பழிவாங்குவதற்காக, அவரது தம்பியை கடத்திய கும்பலை, சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் மீட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

அண்ணன் இல்லனா தம்பிய தூக்குடா என சினிமா வசன பாணியில், அரங்கேறியுள்ளது ஒரு கடத்தல் சம்பவம்...

மதுரையை சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து இசைக் கச்சேரி குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், இசை கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு, நண்பர்கள் இருவரை தனது காரில் திருவேற்காட்டில் விடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திருவேற்காட்டில் இருந்து, மற்ற நண்பர்களுடன் மதுரைக்கு திரும்பிய தேவ் ஆனந்தனின் கார், கல்பாக்கம் செல்வதற்காக, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பயணித்துள்ளது.

திருவேற்காட்டிலிருந்து சற்று தூரம் சென்ற நிலையில், திடீரென அவரது காரை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இடித்துள்ளது.

கோபமடைந்த தேவ் ஆனந்த், காருக்கு ஏதேனும் சேதமா? என கீழே இறங்கி பார்த்தபோது, சினிமா பாணியில் அவரை திடீரென சுற்றி வளைத்தது ஒரு கும்பல்...

"உனது அண்ணன் பணம் தர வேண்டும், அதனால் உன்னை கடத்திச் செல்கிறேன்" எனக் கூறிவிட்டு, கத்தி முனையில் தேவ் ஆனந்தை, மின்னல் வேகத்தில் அந்தக் கும்பல் கடத்திச் சென்றது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவ் ஆனந்தின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், அண்ணனுக்கு பதில் மர்மகும்பல் தம்பியை தட்டி தூக்கியது விசாரணையில் தெரியவந்தது.

அதாவது, தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி என்பவர், மதுரையில் சீட்டு நடத்தி பலருக்கு பணம் கொடுக்காமல் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது.

இதனிடையே தான், பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர், சிரஞ்சீவியை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.

அண்ணனிடம் இருந்து பணத்தை வசூலிக்க அவரது தம்பிக்கு கட்டம் கட்டியதும், அந்த வலையில் தேவ் ஆனந்த் சிக்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, திருவேற்காடு போலீசார் தனிப்படை அமைத்து, கடத்தப்பட்ட தேவ் ஆனந்தை மும்முரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவியிடம் பணத்தை ஏமாந்தவர்களின் செல்போன் எண்களை போலீசார் திரட்டி, ஆய்வு செய்தபோது, ஒரு சிலரின் செல்போன் எண்களின் சிக்னல்கள், ஒரே இடத்தைக் காட்டியுள்ளது.

அதன்படி, அந்த செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் பின்தொடர்ந்தபோது, பொன்னமராவதியில், தேவ் ஆனந்தை கும்பல் காரில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

கடத்திச் செல்லும் காரை கண்டறிந்த போலீசார், அதனை மடக்க நினைத்தபோது, அந்த கும்பல் போலீசாரைக் கண்டதும், காரை வேகமாக இயக்கியுள்ளது.

பின்னர், சினிமா பட பாணியில் காரை பின்தொடர்ந்த போலீசார், காரை மடக்கிப் பிடித்து, கடத்தப்பட்ட தேவ் ஆனந்தை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தல்காரர்களான முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்