போலீசார் என கூறி முதியவர்களிடம் கைவரிசை..தமிழகத்தை மிரட்டிய ஈரானிய கொள்ளையர்கள்

x

சாலையில் நடந்து செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து கைவரிசை காட்டிய ஈரானிய கொள்ளையனை ஆந்திரா சென்று தனிப்படை போலீஸ் கைது செய்திருக்கிறது. தமிழகத்தில் முகாமிட்டு இருக்கும் ஈரானிய கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை அடையாறை சேர்ந்த லதா என்ற 68 வயதான மூதாட்டி, கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை கழட்டி பையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என அக்கறையாக பேசி அந்த நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து அந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில் இருசக்கர வாகன எண்ணை வைத்து சோதனை செய்த போது அது போலியானது என தெரியவந்தது. மேலும்

அந்த வாகனம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை தேடிய போது அந்த கொள்ளை கும்பல் ஆந்திராவில் வாகனத்தை விட்டுவிட்டு காரில் தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

உடனடியாக ஆந்திராவில் முகாமிட்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். கிட்டத்தட்ட 3 மாதங்களாக 200 சிசிடிவி பதிவுகளை சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் பில்லேரு பகுதியை சேர்ந்த இம்தியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரை பிடித்து விசாரித்த போது தான், கொள்ளை கும்பல் இத்தனை நாட்களாக செய்து வந்தது என்ன? என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது...

மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து இத்தனை நாட்களாக கொள்ளையில் ஈடுபட்டு வந்தது ஈரானிய கும்பல் என தெரியவந்தது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்த ஈரானிய கும்பல், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளையும் சரளமாக பேச கற்றுக் கொண்டுள்ளது.

பின்னர் தமிழகம்,கேரளா, மகாராஷ்டிரா, பெங்களூரு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தனித்தனி குழுக்களாக செல்லும் அவர்கள், மூதாட்டிகளை மட்டுமே குறி வைத்து இதே பாணியில் கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது...

ஈரானிய கொள்ளை கும்பலின் தலைவனான பாகர் என்பவருடன் இம்தியாஸ் உட்பட 5 பேர் சென்னைக்கு போலீஸ் போல டிப்டாப்பாக வந்து மூதாட்டியிடம் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது.

கொள்ளையடித்த பின்பு ஆந்திரா மாநில எல்லை வரை இருசக்கர வாகனத்தில் சென்று பின்னர் கார்களில் மாறி தப்பித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியதும் , ஆந்திர மாநிலத்தில் பில்லூர், குண்டக்கல் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இது போன்ற கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போதும் போலியான நம்பர் பிளேட்டுகளை தயாரித்து வைத்துக் கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் தப்பிச் செல்வதும் இந்த கும்பலின் வழக்கமாக இருந்துள்ளது.

கொள்ளையடித்த பிறகு நகைகளை விற்று பணத்தை தங்களுக்குள் பங்கிட்டு கொள்ளும் இந்த கும்பல், அதை வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கியிருந்து கைவரிசை காட்டியிருப்பதாகவும் தகவல் வெளிவந்த நிலையில் அந்த கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் அம்பிவெளி, கர்நாடகாவின் பிதர் ஆகிய பகுதியில் முகாமிட்டிருந்த ஈரானிய கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் வந்து மூதாட்டிகளிடம் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்து வந்ததும் உறுதியானது.

பாதுகாப்புக்காக செயினை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் என யாரேனும் உங்களை அணுகினால் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்