தமிழகத்தை உலுக்கிய சம்பவம் குழந்தையின் தாய்க்கு 21 கேள்விகள்- வேகமெடுக்கும் விசாரணை - அடுத்து என்ன?

x

ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜரான குழந்தையின் தாய், மருத்துவ அலட்சியமே கையை அகற்ற காரணம் என குற்றம் சாட்டினார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு வலது கை அழுகிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் கை அகற்றப்பட தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்த நிலையில், இது குறித்து விசாரணை குழுவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பெற்றோர் குற்றச்சாட்டு தொடர்பாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் ஆஜராகி பதிலளித்த குழந்தையின் தாய் அஜீஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை குழுவின் 21 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாக தெரிவித்தார். குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு, மருத்துவர், செவிலியர்களின் அலட்சியமே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

தனது குழந்தையை குறைமாத குழந்தை என திரும்ப திரும்ப சொல்வது மிக வருத்தம் அளிப்பதாக அஜீஷா வேதனை தெரிவித்தார். குழந்தையை 2 கைகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன், இப்போது வலது கை இழந்ததால் மகனின் வாழ்வே போய்விட்டது என கலங்கிய அஜீஷா, அரசு கட்டாயம் நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே சிகிச்சையில் உள்ள குழந்தையை முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் நேரில் பார்த்து, பெற்றோரிடம் ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மருத்து அலட்சியம் காரணமாக குழந்தைகளுக்கு கால், கைகள் போகிறது எனவும், குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

குழந்தை கை அழுகிய விவகாரம் குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்