மெட்ரோ பணியிலிருந்த கிரேன் மாயம்..கிரேனுக்கு ஸ்கெட்ச் போட்ட திருடன்..Sketch-ஏ போடாமல் தூக்கிய போலீஸ்..

x

சென்னை மெட்ரோ ரயில் பணியிலிருந்த கிரேனை ஆந்திராவுக்கு கடத்திய பலே கும்பல் குறித்த தொகுப்பை காணலாம்...

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிக்கு பயன்படுத்தப்படும் கிரேன்கள் இரவில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இப்படி மேடவாக்கம் கூட்டுரோடு அருகே 10 ஆம் தேதி இரவு நிறுத்திவைக்கப்பட்ட கிரேனை காலையில் காணவில்லை. இந்த செய்தி சைட் இன்ஜினியர் ஆனந்தகுமாருக்கு அதிர்ச்சியளிக்க, அவர் கொடுத்த புகாரில் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மேடவாக்கம் பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு கிரேனை சிலர் திருடுவது தெரியவந்தது. கிரேனை ஓட்ட தொடங்கிய ஆசாமி ஏதோ சொந்த காசில் வாங்கிய முதல் டிராக்டர் மாதிரி ஹாயாக சாலையில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அவர் செல்லும் திசையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தவாறு போலீசார் விசாரணை தொடங்கியது.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசாருக்கு கிரேன் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டதும், அங்கு பாதி ரேட்டுக்கு விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேடவாக்கத்தில் இருந்து சேலையூர், தாம்பரம் வழியாக வெளிவட்ட சாலைக்கு கிரேனை கொண்டு சென்றவர் திருத்தணி வழியாக கடப்பாவிற்கு கிரேனை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு கனரக வாகனங்களை வாடகைக்குவிடும் நரசிம்ம ரெட்டியிடம் கிரேன் விற்கப்பட்டுள்ளது. திருட்டு கிரேன் என தெரியவந்தும் நரசிம்ம ரெட்டி வாங்கியிருக்கிறார், பின்னர் காளஹஸ்தி கொண்டு சென்று கிரேன் எண்ணை மாற்றுவதற்கான வேலையை தொடங்கியிருக்கிறார். கிரேனை கண்டுபிடித்த போலீசார் நரசிம்ம ரெட்டியை கைது செய்து விசாரித்த நிலையில், திருட்டு கும்பலும் சிக்கியிருக்கிறது.

எண்ணூர் நேரு நகரை சேர்ந்த கிரேன் டிரைவர் முரளியின் மூளைதான் இந்த திருட்டுக்கு இவ்வளவு திட்டங்களை போட்டிருப்பது தெரியவந்துள்ளது. பட்டாபிராமை சேர்ந்த கார்த்திக், எர்ணாவூரை சேர்ந்த திருநாவுக்கரசுடன் சேர்ந்து கிரேனை திருடிய முரளி, நரசிம்ம ரெட்டியின் டிரைவர் அணில் குமார் ரெட்டி பழக்கத்தில் ஆந்திரா சென்று அதனை விற்றிருக்கிறார்.

உல்லாச வாழ்வுக்காக கிரேனை திருடி, 300 கிலோ மீட்டர் ஓட்டிச் சென்று 15 லட்சம் ரூபாய் பேரம் பேசி முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாயை வாங்கிவந்த முரளியை அவரது கூட்டாளிகளுடன் கொத்தாக தூக்கியிருக்கிறது போலீஸ்... அவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாயை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்