தாலி கட்டும் நேரத்தில் சுயரூபம் காட்டிய மணமகள்.. மணமகன் எடுத்த சபதம் - 13 நாள் காத்திருந்து கழுத்தில் ஏறிய தாலி

x

திருமண நாளில் எஸ்கேப் ஆன மணப்பெண்ணை, 13 நாட்கள் அவரது வீட்டிலேயே தங்கி இருந்து, தேடிப் பிடித்து, அதே பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். ...

பிரேக் அப் ஆன காதல்... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்... முகூர்த்த நாளிலேயே ஏதோ ஒரு காரணத்தால் நின்று போன திருமணங்கள்... இப்படி பல சம்பவங்களை எல்லாம் நாம் பார்த்திருக்க முடியும்... இந்த சம்பவங்கள் நமக்கு விளக்குவது என்னவென்றால், 'கதம் கதம்.... முடிந்தது முடிந்ததுதான்' என்பதே...

இதே போலவே, திருமண நாளன்றே நின்று போன சுபமுகூர்த்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது... ஆனால், இந்த சம்பவத்திற்கு 'கதம் கதம்' என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது... லேட் ஆனாலும் லேட்டஸ்ட் திருமணம் என்றுதான் சொல்ல வேண்டும்... அப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவம் இது...

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்ரவன் குமார் என்ற இளைஞருக்கும், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே, பாலி மாவட்டத்தில் திருமணம் நடக்க இருந்தது.

திருமண நாளன்று, மணமகள் வீட்டின் அருகேயுள்ள திருமண மண்டபத்துக்கு மணமகனும், அவரது உறவினர்களும், விருந்தினர்களும் வந்து காத்திருந்தனர்.

அந்த வேளையில், திருமணம் மற்றும் விருந்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விருந்தினர்களுக்கோ, விருந்தின் வாசம் மூக்கை துளைக்க, எப்போ தாலி கட்டுவாங்க, எப்படா சாப்பிட போலாம்னு என்ற எண்ணம்தான் மனதில் ஓடியபடியே இருந்துள்ளது.

தாலி கட்டி புதுவாழ்க்கையை தொடங்க மருமகன் காத்திருக்க, திருமணத்துக்கான நேரம் நெருங்கியும், மணமகள் வரவில்லை.

ஏன் இன்னும் மணப்பெண் வரவில்லை என மாப்பிள்ளை வீட்டார் ஒரு கட்டத்தில் கேட்க, பெண் வீட்டார் சொன்ன பதில், அவர்களின் தலையில் இடி விழுந்தது போல இருந்தது...

அதாவது மணமகள், தனது உறவினர் ஒருவருடன் மாயமாகி விட்டது என கூறவே, அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.

பெண்ணின் செயலால் தலைகுனிந்த மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாரிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால், மணமகனோ, அங்கிருந்து செல்ல மறுத்துள்ளார்.

திருமணம் முடியாமல் சொந்த ஊருக்கு சென்றால், உறவினர்கள் அவமரியாதையாக பேசுவார்கள் என்பதால், கட்டினால் சாந்தியைத் தான் கட்டுவேன் என படத்தின் டயலாக் எல்லாம் கூறி, மணமகன் அந்த திருமண மேடையிலேயே சபதம் எடுத்துள்ளார் மணமகன்....

அதாவது சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தால், நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுதான் செல்வேன் எனக் கூறிய மணமகன், மணமகள் வீட்டிலேயே தங்கி, பெண் வீட்டாருடன் சேர்ந்து மணப்பெண்ணை தேடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மணமகள் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். 13 நாட்களுக்குப் பின், மணப்பெண் மணீஷா, வேறு ஒரு ஊரில் இருப்பதை அறிந்த போலீசார், அவரை அங்கிருந்து அழைத்து வந்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின், மணிஷா கழுத்தில் ஷ்ரவன் குமார் தாலி காட்டினார். எடுத்த சபதத்தை முடித்த மணமகன் ஷ்ரவன் குமார், 13 நாட்களுக்குப் பின், மனைவியுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கு கம்பீரமாக நடந்து சென்றுள்ளார்.

இந்த விவகாரத்தில், மணீஷாவை அழைத்துச் சென்ற உறவினர் யார்? இருவரும் காதலித்தனரா? 13 நாட்கள் இருவரும் எங்கு தங்கியிருந்தனர்? என்ற விபரங்களை போலீசார் தரப்பில் தெரிவிக்கவில்லை... எதுவாக இருந்தாலும் சரி, ஷ்ரவன் குமார் தனது மனைவியை கொக்கி போட்டு தூக்கி கொக்கி குமாராக மாறினார் என்பதுதான் இந்த சம்பவத்தில் அரங்கேறிய சுவாரஸ்யம்...


Next Story

மேலும் செய்திகள்