ராணியை மிஞ்சும் அளவுக்கு சொத்து.. அசரடிக்கும் பிரிட்டன் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் பின்புலம்

x

இந்திய ஐடி துறையின் தந்தை"..... என்று வர்ணிக்கப்படும் 'இன்ஃபோசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் தான் தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரித்துள்ளார்.

ஸ்டான்ஃ​போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்த போது, நாராயண மூர்த்தியின் ஒரே மகளான அக்‌ஷதா மூர்த்தியுடன் மலர்ந்த இவரது காதல்,

கடந்த 2009ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் முடிந்தது. பெங்களூருவில் வைத்து தான் இந்த காதல் ஜோடியின் திருமணமும் நடைபெற்றது.

தற்போது 42 வயதான இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரிஷி சுனக்கின் தாய் வழி மற்றும் தந்தை வழி பாட்டி- தாத்தாக்கள் இருவருமே இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆனால் தாய் - தந்தை பிறந்தது ஆப்பிரிக்க நாடுகளில். கடந்த 1960களில் தான் ரிஷி சுனக்கின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியுள்ளது. ரிஷி சுனக் பிறந்தது, படித்தது எல்லாமே இங்கிலாந்தில் தான். இந்து மதத்தை கடைபிடித்து வரும் ரிஷி சுனக், பகவத் கீதை புத்தகத்தின் மீது ஆணையிட்டே எம்பியாக பதவி ஏற்று கொண்டவர்.

அரசியலுக்குள் ரிஷி சுனக் காலடி எடுத்து வைத்தது, 2014 ஆம் ஆண்டு தான். அதற்கு முன்பு வரை வங்கி ஆலோசராகவும்... தனது மாமனாரின் 'கட்டமரான் வென்ச்சர்ஸ்' நிறுவனத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்து வந்த ரிஷி சுனக்... 2014ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த ரிச்மாண்டு தொகுதியில் களமிறங்கி எம்பியாக தேர்வாகினார், ரிஷி சுனக், இன்று வரையிலும் ரிச்மாண்டு தொகுதியை தன்வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் நிதியமைச்சராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ரிஷி கொண்டு வந்த பொருளாதார சீர்த்திருத்தங்கள் பலவும் எதிர்ப்பையே சம்பாதித்தன. ஆனாலும் அத்தகையை நெருக்கடியான சூழல்கள் பலவற்றையும் சமாளிப்பதில் வெற்றி கண்டிருந்தார்.

மனைவியின் சொத்து வரி விவகாரத்தால் பல முறை அரசியல் நெருக்கடிக்களுக்கு ஆளாகியவரும் கூட...! தற்போதையை நிலவரப்படி, இங்கிலாந்து ராணியை மிஞ்சும் அளவிற்கு சொத்து மதிப்பு கொண்டிருந்தார், ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி. இந்திய மதிப்புப்படி, இந்த தம்பதியரின் சொத்து மதிப்பு சுமார் ஐயாயிரத்து 960 கோடி ரூபாய். இதுவே பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பெற காரணமாகியுள்ளது.

ஆனால் சர்ச்சைகள் பலவற்றையும் கடந்து... இன்று இங்கிலாந்தின் பழமையான கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்தும் ஆளுமையாக உயர்ந்துள்ளார், ரிஷி சுனக்.

சொந்த கட்சியினரின் பேராதரவால் இங்கிலாந்து பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிரிட்டனை மீட்டெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Next Story

மேலும் செய்திகள்