வரலாற்றை ஸ்தம்பிக்க வைத்த விபத்து.. அங்கும் இங்கும் சிதறி கிடந்த உடல்கள் - எங்கும் ஒலித்த மரண ஓலம்..

x

இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...

உருகுலைந்து கிடைக்கும் இந்த ரயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உடைந்து போக செய்கிறது. எண்ணற்ற கவனவுகளை சுமந்து சென்றவர்கள் என்ன நடந்தது என்பது தெரியாமலே உலகை பிரிந்துள்ளார்கள்...

வாழ்வாதாரம் தேடி மாநிலம் தாண்டி மாநிலம் செல்லும் மக்களை சுமந்து சென்ற ரயில்கள் சிதைவுகளாக காட்சியளிக்கிறது.

இந்த கோரம் அரங்கேறியது ஒடிசா மாநிலம் பாலசோரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாஹாநாகாவில்...

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரிலிருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி பாய்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வெள்ளி இரவு 7 மணியளவில் பாஹாநாகாவை அடைந்துள்ளது.

அதே வேளையில் பெங்களூருவிலிருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களுரூ - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரசும் நெருங்கியுள்ளது.

இந்த நேரத்தில் கோர விபத்து அங்கு அரங்கேறியிருக்கிறது. சரக்கு ரயில் ஒன்றும் விபத்தில் சிக்கியிருக்கிறது.

டமார்..டமார் என பெரும் சத்தத்துடன் ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி, தண்டவாளத்தைவிட்டு

தூரமாக விழுந்து. பெட்டிகளின் கதவுகள், ஜன்னல்கள் பறந்திருக்கிறது. பெர்த் சீட்கள் எல்லாம் சின்னாப்பின்னமாகி சிதைவாக விழுந்துள்ளது.

சக்கரங்கள் தண்டவாளத்தில் சிதறிகிடக்க, பெட்டிகள் எல்லாம் அப்பளமாக நொறுங்கியது. தண்டவாளங்கள் ரத்த சகதியாக காட்சியளித்தன. விபத்து நடந்த தகவல் அறிந்த உள்ளூர் கிராம மக்கள் அனைவரும் விரைந்து சென்று சிதைவுகளில் சிக்கியவர்களை எல்லாம் மீட்க தொடங்கினர்.

சிலரை சடலமாக மீட்டது வேதனையை ஏற்படுத்தினாலும், உயிரோடு மக்களை மீட்டது அவர்களக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அக்கம் பக்கத்து கிராமங்கள் எல்லாம் ஒன்று கூடி ஒவ்வொரு வரையும் வெளியே எடுத்தனர்.

உயிரோடு தப்பியவர்கள் உடன் இருந்தவர்களை தேடி திரிந்த காட்சி காண்போர் கண்களை குளமாக்கியது. எங்கும் அழுகுரல் கேட்க அப்பகுதியே கோரமாக காட்சியளித்தது.

உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். பாலசோர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு படை, ஒடிசா மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியது.

பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவையும் ஒடிசா அரசு அங்கு அனுப்பியது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்ட உடனேயே பாலசோர், புவனேஷ்வர் மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்தம் தேவை என்றதும் மருத்துவமனைகளுக்கு விரைந்த ஒடிசா இளைஞர்கள் பலரும், தங்கள் சகோதரத்துவத்தை காட்டி ரத்தம் தானமாக வழங்கினர்.

200-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சேவையில் பயன்படுத்தப்பட்டது. விடிய விடிய மீட்பு பணிகளும், சிகிச்சைக்கான மருத்துவ பணிகளும் துரிதமாக நடைபெற்றது.

காலையிலும் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்றது. ராணுவம், விமானப்படையும் மீட்பு பணியில் இணைக்கப் பட்டது. 15 மணி நேரங்களில் மீட்பு பணிகள் நிறைவடைந்தது.

பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கும் இந்த கோர விபத்து சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய ரயில்வே வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் துயரகரமான விபத்துக்கு மூல காரணம்...? என்ன என்ற கேள்வி அனைவரையும் உலுக்கி வருகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணையிலே தெரியவரும் என ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்