#தந்தி_EXCLUSIVE || ரயில் விபத்தும் அதிர வைக்கும் ஆவணமும்.. பல திடுக்கிடும் தகவல்கள்..

x

கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பான முதல் கட்ட கள விசாரணை குழு அறிக்கையின் பிரத்யேக ஆவணங்கள் தந்தி டிவிக்கு கிடைத்தன. இதில் விபத்துக்கான காரணம் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்களைப் பார்க்கலாம்.....

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முதல் கட்ட கூட்டு விசாரணை குழுவின் அறிக்கையில்....

ஜூன் 2 ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயிலும், ஹவுரா விரைவு ரயிலும் ஒடிசாவின் பாஹநாகர் பஜார் ரயில் நிலையத்தை கடந்தபோது சரியாக மாலை 6.55 மணிக்கு விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12841 கோரமண்டல் விரைவு ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், சில பெட்டிகள் குப்புற கவிழ்ந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாஹநாகர் பஜார் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் விரைவு ரயில் வருவதற்கு முன்பாக, பிரதான தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்றை நிறுத்தி வைக்க, இருப்பு பாதை பாயின்ட் 17ஏ லூப் லைனுக்கு மாற்றப்பட்டதாகவும்,

பின்னர் கோரமண்டல் ரயிலுக்காக, நிலைய பேனல் போர்டில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, அளவீடுகள் சரியாக காட்டியதாகவும் அதன் அடிப்படையில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சரக்கு ரயிலுக்காக திருப்பப்பட்ட இருப்பு பாதை பாயின்ட் 17ஏ மீண்டும் மெயின் லைனுக்கு மாறவில்லை என்பதால் பிரதான லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில்

லூப் லைனுக்குள் சென்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின்போது, கோரமண்டலின் சில பெட்டிகள் கீழ் பிரதான லைனில் விழுந்ததால், அந்த வழியாக வந்த ஹவுரா விரைவு ரயில் மோதியதில் அதன் 2 பெட்டிகள் தடம்புரண்டதாக அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தண்டவாள பராமரிப்பு தலைமை பொறியாளர், கேரேஜ் மற்றும் வேகன் தலைமை பொறியாளர், தலைமை லோகோ ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் இந்த கூட்டு விசாரணை குழு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ரயில்வே வாரியத்திடம் தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் நிலை கள விசாரணை குழு அறிக்கை அடிப்படையிலேயே, எலக்ட்ரானிக் இன்டெர் லாக்கிங் மாற்றமே விபத்துக்கான காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்