தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை தாக்கிய தினம் இன்று (26.12.2004)

x

ஆழ்கடலில் ஏற்படும் நிலநடுக்கத்தின் மூலம் உருவாகும் சக்தி வாய்ந்த சுனாமி பேரலைகள், பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு கடலில் பயணித்து, கடற்கரை பகுதிகளை தாக்கி அழிப்பது வழக்கம். ஜப்பான் மற்றும் இதர பசிபிக் கடற்பகுதி நாடுகளில் சுனாமி தாக்குதல் பன்னெடுங்காலமாக ஏற்பட்டு வருகின்றன.

2004 டிசம்பரில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் ஆழ்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.3 ஆக பதிவு கொண்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் இரண்டாவது மிக வலிமையான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி பேரலை, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட 14 நாடுகளை கடுமையாக தாக்கியது. இதில், சுமார் 2.3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் 16 அடி உயரம் வரை எழுந்த சுனாமி பேரலை, 400 மீட்டர் முதல் 1.5 கிலோ மீட்டர் வரை நிலப்பகுதிக்குள் ஊடுருவி பெரும் சேதத்த்தை ஏற்படுத்தியது.

இந்த சுமானி தாக்குதலில் இந்தியாவில் 16,269 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர். நாகபட்டிணம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 5,819 பேர் உயிரிழந்தனர்.

சுனாமி பேரலையினால், தென் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த பொருளாதார இழப்பில் சுமார் 50 சதவீதத்தை தமிழகம் சந்தித்தது. சுமார் 4,700 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகம் இழப்பை சந்தித்தது.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தமிழக கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர் கிராமங்கள், இதர குடியிருப்புகள், மீன் பிடி படகுகள் மற்றும் இதர சொத்துகள் நாசமடைந்தன. பல லட்சம் பேர் வாழ்வாதரத்தையும், வீடுகளையும் இழந்தனர்.

சுனாமி நிவாரணப் பணிகளில், மத்திய மாநில அரசுகளுடன் இணைந்த ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரும் பணியாற்றினர். சுனாமியில் இறந்தவர்களின் உடல் களை தேடி கண்டு பிடித்து அடக்கம் செய்யும் பணிகளில் பல ஆயிரம் பேர் இரவு பகலாக பணியாற்றினர்.

சுனாமி நிவாரணத்திற்கு உலகெங்கும் இருந்து பல ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி குவிந்தது. மீள்கட்டுமான பணிகள், புதிய குடியிருப்புகளை உருவாக்கும் பணிகள் பல ஆண்டு களாக தொடர்ந்து நடைபெற்றது.

தமிழகத்தை சுனாமி பேரலை தாக்கிய தினம், 2004 டிசம்பர் 26.


Next Story

மேலும் செய்திகள்